காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்
19 பிப், 2023 – 06:59 IST
சென்னை : காமெடி நடிகர் மயில்சாமி(57) சென்னையில் காலமனார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(ஜன., 19) அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார்.
தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார். அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி நடித்து அசத்தினார். ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்கள் கூட நடித்துள்ளார். கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை கூட முடித்துவிட்டு வந்தார்.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகர்களாக உள்ளனர்.
+ There are no comments
Add yours