நடிகை ஜெயமாலினியின் மகன் திருமணம் பிப்ரவரி 23-ம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பலரையும் ஜெயமாலினியும் அவரது கணவரும் நேரில் சந்தித்து திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
12 வயதில் சினிமாவில் குரூப் டான்சராக கரியரைத் தொடங்கிய ஜெயமாலினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றி, கவர்ச்சி ராணியாக இந்திய சினிமாவில் கலக்கியவர்.
நடனமாடி அறிமுகமானவர், பிறகு நடிக்கவும் செய்தார். கவர்ச்சி நடிகையாக இவர் தோன்றிய சினிமாப் பாடல்கள் அந்தக் காலத்தில் இளைஞர்களைக் குத்தாட்டம் போட வைத்தன என்றால் மிகையில்லை.
நடிகை ஜோதிலட்சுமியின் சகோதரியான இவர், எம்.ஜி.ஆர். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்கள் பலருடனும் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
சினிமாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பார்த்திபன் என்கிற காவல்துறை அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இந்நிலையில், இவரது மகன் ஷியாம் ஹரிக்கு, பிரியங்கா என்பவருடன் வருகிற 23ம் தேதி காலை சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்க இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கிறது அந்தப் பகுதி.
ஷியாம் இந்தத் தம்பதிக்கு ஒரே மகன் என்பதால் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். எனவே சினிமா பிரபலங்கள் திரளாக இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours