படத்தின் முக்கிய பலம் தனுஷ். நடிப்புக்குப் பெரிய தீனி இல்லையென்றாலும் மாணவர்களின் அபிமான வாத்தியாக மனம் கவர்கிறார். வில்லனாக சமுத்திரக்கனி; தனியார்ப் பள்ளிகளின் அட்டூழியங்களை, லாப வெறியை ஒற்றை ஆளாகத் திரையில் கடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆனால், கோட்-சூட் அணிந்து ஹீரோவிடம் சவால்விடும் வசனங்களை மட்டுமே பேசும் டெம்ப்ளேட் வில்லனாகவே வந்துபோகிறார். தனுஷுடனான ‘சார் – மேடம்’ ரொமான்ஸ் க்யூட்டாக இருந்தாலும், சம்யுக்தாவுக்கு அதைத் தாண்டி பெரிதாக எந்த வேலையும் இல்லை.
ஒப்பீட்டளவில் கென் கருணாஸுக்குக் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாதியில் வரும் ஷா ரா காமெடி காட்சிகள் எடுபடவில்லை. துணைநடிகர்களில் இவர்கள் தவிர்த்து பெரும்பாலானவர்கள் தெலுங்குத் தேச இறக்குமதிகளே. தமிழக – ஆந்திர எல்லையில் நடக்கும் கதை என முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள்தான். ஆனால், அனைத்து விஷயங்களிலும் இப்படி தமிழ் – தெலுங்கு என இரண்டு தரப்புக்கும் நடுவில் சிக்கி நிற்பதால் ஒரு வித செயற்கைத்தனம் படமெங்கிலும் வழிந்தோடுகிறது. குறிப்பாக, லிப் சிங்க் பிரச்னைகள் நிறையவே எட்டிப் பார்க்கின்றன.
+ There are no comments
Add yours