சோசியல் மீடியாவை விட்டு வெளியேறிய ஜோஜூ ஜார்ஜ்
16 பிப், 2023 – 12:47 IST

மலையாளத்தில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருந்த இரட்ட என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. இந்த படம் குறித்தும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குறித்தும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறுகிறேன் விரக்தியுடன் அறிவித்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
இதுகுறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர் பின்னர் ஏனோ அதையும் அழித்துவிட்டார். ஆனால் அந்த பதிவில் அவர் கூறும்போது, “கொஞ்ச நாளைக்கு நான் சோசியல் மீடியாவில் அனைத்து தளங்களிலிருந்தும் வெளியேறுகிறேன். என்னுடைய இரட்ட படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவே முயற்சித்தேன். ஆனால் மீண்டும் என்னை பர்சனல் ஆகவும் தொழில் ரீதியாகவும் குறிவைத்து கருத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இப்போது என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழலில் நான் இருக்கிறேன். தயவுசெய்து என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். எனக்கு உங்களுடைய உதவியும் தேவையில்லை. ஆனால் என்னை தொந்தரவு செய்வதிலிருந்து நீங்கள் ஒதுங்கி இருக்க முடியும்” என்று கூறியுள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
பொதுவாகவே சோசியல் மீடியாவில் படங்களை விமர்சிப்பவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் ஜோஜூ ஜார்ஜ். கடந்த வருடம் கேரளாவில் பெட்ரோல் உயர்வை கண்டித்து சிலர் போராட்டம் நடத்தியபோது அந்த சமயத்தில் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்ததற்காக ஜோஜூ ஜார்ஜின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பும் எழுந்தது. அப்போதே சோசியல் மீடியாவை விட்டு வெளியேறிய ஜோஜூ ஜார்ஜ் தற்போது தான் நடித்து வந்த இரட்ட படத்தின் புரமோஷனுக்காகத்தான் மீண்டும் சோசியல் மீடியாவில் நுழைந்தார். நுழைந்த வேகத்திலேயே தற்போது மீண்டும் வெளியேறியுள்ளார் என்பது தான் சோகத்திலும் சோகம்.
+ There are no comments
Add yours