உலகத்தின் மிகச் சுருக்கமான காதல் கதை
கமலுக்கும் அமலாவிற்கும் இடையில் நிகழும் சுருக்கமான காதல் கதை சோகத்துடன் நிறைவுறுவது அற்புதமான காட்சி. தான் செய்த பிழையை அமலாவிடம் கடைசியில் ஒப்புக் கொள்வார் கமல். பிரிவுணர்வு காரணமாக, தன் தொடர்பு முகவரியை ஒரு துண்டுச் சீட்டில் அமலா எழுதித் தருவதும், அது காற்றில் பறந்து எடுக்க முடியாத பள்ளத்தில் விழுந்து விடுவதும் உணர்வுபூர்வமான காட்சி. தவறான வழியில் வரும் சொகுசு மட்டுமல்ல, காதலும் கூட நிலைக்காது என்கிற கவித்துவமான நியாயம் இதில் வெளிப்படுகிறது.
இன்னொரு முக்கியமான காட்சியும் உண்டு. தன்னிடம் திடீரென்று பணம் சேர்ந்துவிட்டதால், ‘இதை வாங்கித் தரட்டுமா… அதை வாங்கித் தரட்டுமா?’ என்று கடை கடையாக அமலாவைக் கூட்டிச் செல்வார் கமல். ஆனால் அமலாவோ, ஒரு பாழடைந்த கட்டடத்தின் சுவரில் வளர்ந்திருக்கும் பூவைக் காட்டுவார். மிகச் சிரமப்பட்டு ஏறி அதை எடுத்துத் தரும் கமலுக்கு, அதிலிருந்து ஒரு பூவை மட்டும் தந்து விட்டு எதிர்பாராத கணத்தில் ஒரு முத்தமும் தந்து விடைபெறுவார் அமலா. அந்த ஒற்றைப் பூவை பிரசாதம் போல் கையில் ஏந்திச் செல்வார் கமல். அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழும். அதை எடுக்கச் செல்லும் சமயத்தில் அந்தப் பூவை காலால் தெரியாமல் மிதித்து நசுக்கிவிடுவார். இப்படிக் கவிதையான காட்சிகளுக்குள் அறம் சார்ந்த செய்திகளையும் புதைத்து வைத்திருந்தார் சீனிவாசராவ்.
+ There are no comments
Add yours