நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி ஆகியோரிடையே பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த விவகாரத்தில் இருதரப்பும் பரஸ்பரம் பேசித் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021- ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்து, பாராட்டி கைக்குலுக்கியபோது, அதை ஏற்க மறுத்து தன்னை அவதூறாக பேசிவிட்டு, தன்னை தாக்கியதாகவும் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைதாப் பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்தி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடைகோரியும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், `நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும்’ என கடந்த ஜூலை 29-ல் உத்தரவிட்டது. அதேவேளையில் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த இந்த விவகாரம், சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல, எனவே இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதனையடுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசமாக செல்ல விரும்புவதாக இருந்தால், அதற்கு ஏற்பாடு செய்வதாகவும், மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பேசியே இவ்விவகாரத்தில் தீர்வு காணலாம் என்றும், அதேவேளையில் இருவரும் தங்களது சுயமரியாதைக்கு பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்தனர். சமரச விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் மார்ச் 2-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் mediation-க்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours