வசந்த முல்லை: திரை விமர்சனம் | vasantha mullai movie review

Estimated read time 1 min read

மென்பொருள் துறையில் பணியாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா), பணிச்சுமை தரும் பெரும் மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் உடல்நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சுற்றுலா முடித்து வரும் வழியில் உள்ள பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.

‘டைம் லூப்’ என்கிற கால வளையத்துக்குள் சிக்கி, திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீள முயலும் முதன்மைக் கதாபாத்திரங்களின் ‘ஜீவ-மரண’ போராட்டம் போல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா. உண்மையில் அது ‘கால வளைய’க் கருத்தாக்கம் இல்லை என்பதை நிறுவும் இறுதிக் காட்சியின் மூலம், இயக்குநர் தனது உயரிய சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர்கள் தேர்வு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை ஆகிய அம்சங்களுடன் தரமான ‘மேக்கிங்’ மூலம் அயர்ச்சியில்லாத திரை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

மென்பொருள் துறை தரும் அழுத்தம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்காமல், சில காட்சிகள், ஒரு பாடல் ஆகியவற்றின் மூலம் ருத்ரனின் சிக்கலை நிறுவிய விதம் நேர்த்தி. அதேநேரம், தீவிர மன அழுத்தம், ஒருவருக்கு அசுர உடல் பலத்தைக் கொடுக்கும் என்கிற தொடக்கக் காட்சி, அச்சு அசலாக ‘ஹீரோயிச’க் குப்பை. அதேபோல், ருத்ரனும் நிலாவும் தங்கும்விடுதியின் பழமையானத் தோற்றம், வில்லேந்தி வரும் உருவம் கம்ப்யூட்டர் கேம்களில் வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பது ஆகியவற்றுக்கான பொருத்தப் பாட்டையும் தொடர்பையும் ருத்ரன் கதாபாத்திரத்துடன் இணைக்கத் தவறிவிட்டார் இயக்குநர்.

ரஜினியின் உடல்மொழித் தாக்கத்தை தன் நடிப்பில் பல காலம் பின்பற்றி வந்திருக்கும் பாபி சிம்ஹா, கடந்த சில படங்களில் அதை உதறியிருந்தது போலவே, இதில் ‘ருத்ரன்’ என்கிற கதாபாத்திரமாக உணர வைத்திருக்கிறார். கனவுகளுடன் கைப்பிடித்த கணவனை, பணி அழுத்தங்களிலிருந்து காப்பாற்றப் போராடும் மனைவியாக காஷ்மீரா பரதேசியின் பங்களிப்பு கச்சிதம். அளவான கிளாமர் நடிப்பிலும் கவர்கிறார்.

ஆர்யா இரண்டு காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்துபோகிறார். விடுதியின் வரவேற்பரை ஊழியராக நடித்துள்ள கொச்சு பிரேமன், மருத்துவராக வரும் சரத் பாபு ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

மென்பொருள் துறையின் பணி வாழ்க்கை என்பது வேறொரு உலகமாக இருப்பதை, மருத்துவக் கண்ணோட்டத்துடன் புதிய களத்தில் சுவாரசியமாகச் சொல்ல முயன்று, அதில் வெற்றியும் பெற்றுள்ள ‘வசந்த முல்லை’யை நுகர்ந்து ரசிக்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours