பொதுவாகவே ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக மார்வெல் மற்றும் டிசி போன்ற சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கும், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் போன்ற ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத படங்களும் இந்தியாவில் வசூலில் சக்கை போடு போடுகின்றன. காரை அதிவேகமாக சாலையில் ஓட்டுவதை தாண்டி, கட்டடங்கள் மற்றும் மலைகளுக்கு இடையே பறப்பதையும் மிஞ்சி, விண்வெளிக்கே சென்று வரும் வரையிலான பல சாகச காட்சிகளை கொண்ட திரைப்படம் தான் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ். ஏற்கனவே 9 பாகங்களாக வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் கடைசி பகமாக ஃபாஸ்ட் எக்ஸ் எனும் புதிய திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. அதற்கான டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஃபாஸ்ட் எக்ஸ் டிரெய்லர்:

வரும் மே மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படத்தின் 3.42 நிமிடம் நீளம் கொண்ட டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்பட வரிசையின் கடைசி படமாக இது உருவாகியுள்ளதால் மிகவும் பிரமாண்டமாக ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. வழக்கமான பணத்திற்காகவும், தனது நண்பர்களுக்காகவும் தனது குழுவுடன் சேர்ந்து பல்வேறு சாகசங்களை செய்யும் வின் டீசலின் டாம் கதாபாத்திரம், கடைசியாக ஒரு முறை தனது மகனை காப்பாற்றுவதற்காக இதுவரை செய்யாத பெரும் சாகசம் ஒன்றில் ஈடுப்ட உள்ளது. டாமின் குடும்பத்தையே கொல்ல துடிக்கும் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் டிசியில் அக்குவா மேனாக நடித்து வரும் ஜேசன் மாமோ நடித்துள்ளார். அதோடு, மார்வெல் நிறுவனத்தில் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரீ லார்சன், ஜேசன் ஸ்டாதம், ஜான் சீனா மற்றும் சார்லீஸ் தெரான் ஆகிய ஹாலிவுட்டின் பல முக்கிய நட்சத்திரங்களுடன், ஃபாஸ்ட் சாகாவின் படங்களில் இதுவரை நடித்துள்ள பல முக்கிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெற உள்ளன. அதேநேரம், த்வெயின் ஜான்சன் இந்த திரைப்படத்தில் இடம்பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் வாக்கர்:

ஃபாஸ்ட் சாகா படங்களில் வின் டீசலுக்கு இணையாக பார்க்கப்பட்டவர் பால் வாக்கர். விபத்தில் அவர் உயிரிழந்த நிலையில் வெளியாகும் இந்த கடைசி படத்திற்கான டிரெய்லரில், பால் வாக்கர் சம்மந்தமான பழைய படங்களில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், முந்தைய படத்தை போன்று, இதிலும் பால் வாக்கரின் சகோதரரை பயன்படுத்தி பிரையன் கதாபாத்திரம் மீண்டும் கொண்டு வரப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

டிரெய்லர் எப்படி உள்ளது?

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அழகான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும், டாம் கதாபாத்திரத்திற்கு அனைத்து விதமான பயத்தை காட்டும் வகையில் மிகவும் மோசமான வில்லனாக ஜேசன் மாமோவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சாகாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற 5ம் பாகத்துடன் தொடர்புடைய கதையாக இந்த கதைக்களம் தொடங்குவதாக தெரிகிறது. வழக்கம்போல் கார் ரேஸ், பறக்கும் கார்கள், தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என டிரெய்லர் விறுவிறுவென அமைந்துள்ளது. படமும் அதே வேகத்தில் ஒரு முழுமையான விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

+ There are no comments
Add yours