பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் கவினும் அபர்ணா தாஸும் காதலிக்கிறார்கள். இறுதி செமஸ்டருக்கு முன்பாக, அபர்ணா தாஸ் கருவுற்றிருப்பது தெரிய வருகிறது. இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே தனிக்குடித்தனம் செல்கிறார்கள். வறுமை, அக்கறையும் பொறுப்புமில்லாத கணவருடன் ஏற்படும் சண்டைகள் எனப் பல இடர்பாடுகள் தாண்டி பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அபர்ணா தாஸ். சமய சூழ்நிலைகளால் இந்த ஜோடி பிரிய, பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதுமாக கவின் தலையில் விழுகிறது. இதனால் அவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், இறுதியில் நிகழும் ஓர் உணர்ச்சிகரமான தருணம் போன்றவற்றை, நவுயுக இளைஞர்களுக்கான திரைமொழியில், கலகலப்பும் எமோஷனும் கலந்துகட்டி சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.
மொத்த படமுமே கவினின் தோள்களிலேயே பயணிக்கிறது. அந்தப் பணியை அசராமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். கல்லூரி இளைஞராகப் பொறுப்பற்றத்தனத்தையும், தந்தை பொறுப்பு தரும் பொறுமையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில மாஸ் காட்சிகளிலும், அட்வைஸ் காட்சிகளிலும் உடல்மொழியால் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார். கவினுடன் அபர்ணா தாஸும் நடிப்பில் சம பலத்துடன் மோதுகிறார். கவினுடனான காதலிலும், அவரின் பொறுப்பற்றத்தனத்துடன் போராடும் இடங்களிலும், தன் கோபத்தையும், ஆற்றாமையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், இறுதிக்காட்சிகளிலும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அதேநேரம், இறுதிக்காட்சியைத் தவிர்த்து, இரண்டாம் பாதியில், அபர்ணா தாஸ் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமானது, ‘கதாநாயகனின்’ காட்சிகளால் மறைந்து போகிறது.
+ There are no comments
Add yours