மலையாளத் திரையுலகின் மூத்த இயக்குநரும், கதாசிரியருமான அடூர் கோபாலகிருஷ்ணன், தனது பூர்வீக நிலத்தை, கேரள அரசின் ஏழை மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு தானமாக கொடுத்துள்ள சம்பவம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 1972-ம் ஆண்டு ‘சுயம்வரம்’ என்றப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன், தனது முதல் படத்திலேயே மாஸ்கோ சர்வதேச திரைப்பட விருதுகள் முதல் தேசிய விருதுகள் வரை அள்ளிக் குவித்து கவனம் பெற்றார். அந்தப் படத்திற்கு சிறந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என்னும் 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தது. அதன்பிறகு அவர் இயக்கிய ‘கொடியேட்டம்’, ‘எலிப்பாதாயம்’, ‘Anantaram’ உள்பட பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. திரையரங்குகளுக்கான படங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தியவர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
80 வயதான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இதுவரை 16 தேசிய விருதுகள், 17 கேரள மாநில விருதுகள், மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். 1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை தொடர்ந்து, 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் வழங்கி மத்திய அரசு அடூரை கௌரவித்துள்ளது. இந்நிலையில் மலையாள திரையுலகின் ஜாம்பவனான அடூர் கோபாலகிருஷ்ணன், கேரள மாநிலம் துவாயூர் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக நிலமான 13.5 சென்ட் நிலத்தை கேரள அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
வீடற்ற ஏழை மக்களுக்காக வீடு கட்டித் தரும் திட்டத்தை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதற்காக, அம்மாநிலத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், வசதி படைத்த மக்கள் தங்களது நிலத்தைப் பிரித்துத் தருமாறு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். “மனசோதித்திரி மண்ணு” என்றப் பெயரில் இதற்கான பிரச்சாரத்தையும் கேரள அரசு தொடங்கியுள்ளது.
இதையடுத்து மும்பையில் தற்போது ஐபிஎஸ் பணியில் இருக்கும் தனது ஒரே மகளான அஸ்வதியிடம் கலந்து ஆலோசித்த நிலையில், அவர் முழு மனதுடன் ஒப்புதல் அளித்ததால் இந்த முடிவுக்கு இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சரை தொலைபேசியில் அழைத்து தனது பூர்விக நிலத்தை தானமாக வழங்குவதாகவும், இது நன்கொடை இல்லை என்றும் அடூர் தெரிவித்த நிலையில், நேரடியாக அடூர் வீட்டிற்கே வந்து அமைச்சர் நன்றி சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours