செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் அடிப்படை கதை எங்கு உருவானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பகாசூரன்:

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், பகாசூரன் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகிறது. இதேநாளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவுள்ளது. அண்ணன் செல்வராகவன் – தம்பி தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பகாசூரன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து பகாசூரன் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரான நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பல ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்டு தற்போது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கல்லூரி பெண்கள்:

இந்நிலையில் பகாசூரன் படத்தின் அடிப்படை கதை எங்கு உருவானது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ருத்ர தாண்டவம் படம் முடிச்ச 3வது நாள் என் நண்பர் சேலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் போன் பண்ணினார். உடனே என்னை பார்க்க வேண்டும் என சொன்னார். நானும் ருத்ரதாண்டவம் படம் சர்ச்சையை கிளப்பியதால் பயந்து பயந்து தான் சந்தித்தேன்.

ஆனால் அவரோ என் அடுத்தப்படத்திற்கான கதையோடு வந்தார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் சேலத்தில் கல்லூரியில் படிக்கும் 900 கல்லூரி பெண்கள் ஆன்லைன் மூலமாக பாலியல் தொழில் செய்ததாகவும், அவர்களை கைது செய்து காப்பகத்தில் வைத்து 30 முதல் 45 நாட்கள் வரை அவர்களது வாழ்க்கை முறை மாற அரசு உதவுகிறது. இது தொடர்ச்சியா நடக்குது. எதுலேயும் வெளியே வரல.. அதனால இது சம்பந்தமா படம் எடுங்கன்னு சொன்னாரு என கூறினார்.

அதற்கு முன்னால் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபடும் செயலி, மொபைல் வழியாக பெண்களை வைத்து பணம் செய்யும் கும்பல் பற்றிய சில தகவல்கள் என்னிடம் இருந்தது. இவற்றையெல்லாம் வைத்து தான் பகாசூரன் படம் உருவானது” என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

+ There are no comments
Add yours