தெலுங்கு சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாஹேப் பால்கே’ விருது பெற்றவரை இப்படி ஒரு மாநில எல்லைக்குள் சுருக்கிச் சொல்லி விட முடியாது. எனவே இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் எனலாம். இவரது திரைப்படங்கள், சர்வதேச அரங்குகளில் மிகுந்த பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றன. ‘Auteur’ என்பதற்குச் சரியான உதாரணம் கே.விஸ்வநாத். சமீபத்தில் மறைந்து போன அவரின் இழப்பு, தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல், இந்தியச் சினிமாவுலகிற்கே பேரிழப்பு எனலாம்.
கே.விஸ்வநாத் – இந்தியச் சினிமாவின் பெருமிதம்
பொதுவாகத் தெலுங்கு சினிமாக்களில் உள்ள மிகையான மசாலா வாசனை பற்றி நமக்குத் தெரியும். இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவை மிஞ்சியவர்கள். அப்படியாக, ‘தெலுங்குப் படம்’ என்றாலே மலினமாக இங்குப் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தவர்களில் முக்கியமானவர் கே.விஸ்வநாத். மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியப் பாரம்பரியக் கலைகளைத் தனது திரைப்படங்களின் மூலம் பொதுச்சமூகத்திற்கு நினைவுபடுத்தி அவற்றிற்கு உயிர் தந்தவர். இவரது ‘சங்கராபரணம்’ திரைப்படத்தின் மூலம் செவ்வியல் இசையின் மகத்துவம் இளைய தலைமுறைக்குப் புரிந்தது. ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) திரைப்படத்திற்குப் பிறகு பரதம் கற்பதில் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் ஆர்வம் காட்டினார்கள்.
நதிக்கரைகளில்தான் நாகரிகம் பிறந்தது என்பது உலக வரலாறு. விஸ்வநாத் திரைப்படங்களின் பின்னணியில் வரும் நதிக்கரைகள், இந்தியப் பண்பாட்டின், கலாசாரத்தின் அடையாளங்களை அழகியல் ரீதியுடன் நினைவுபடுத்தின. ஜனரஞ்சகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு வெகுசன திரைப்படத்தை ‘ஆர்ட் பிலிம்’ தரத்தின் அருகே கொண்டு செல்ல முடியும் என்பதற்கான உதாரணங்களைத் தெலுங்கு சினிமாவுலகில் விஸ்வநாத் நிகழ்த்திக் காட்டினார். அவர் இயக்கிய சில தெலுங்குப் படங்கள், தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்த போது, அவை ‘டப்பிங்’ படங்கள் என்பதே மறந்து போய் தமிழ்ப்படங்களாகத் தோன்றிய மாயமும் நிகழ்ந்தது. இங்குப் பிரபலம் என்பதால் கமலுக்காகப் படம் பார்த்தவர்கள் கூட பிறகு விஸ்வநாத்தின் ரசிகர்களாக மாறிப் போனார்கள். விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தைப் பற்றி, இந்த ‘டென்ட் கொட்டாய் சீரிஸில்’ ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.
சமீபத்தில் மறைந்த அவரை நினைவுகூர்வதற்காக இந்த வாரம் இன்னொரு திரைப்படத்தைப் பற்றிப் பார்ப்போம். அது ‘சிப்பிக்குள் முத்து’ (சுவாதிமுத்யம்). 1986-ல் வெளியான இந்தப் படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில், ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது. ‘சிறந்த தெலுங்குத் திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதையும் இது வென்றது.
சிப்பிக்குள் இருக்கிற முத்துவின் வெண்மையுடன் ஒரு மனிதன்
ஒரு முதியவர், தன்னுடைய மகன்கள், பேரப்பிள்ளைகளின் வருகைக்காகப் பூர்வீக வீட்டில் காத்திருக்கிறார். அவர்கள் வருகிறார்கள். “எங்களுடன் வந்து விடுங்களேன்” என்று வழக்கம் போல் வற்புறுத்துகிறார்கள். பெரியவரும் வழக்கம் போல் மறுக்கிறார். கதை எழுதிப் பழகும் பேத்தி “தாத்தா… உங்க கதை என்னன்னு சொல்லுங்களேன்… தெரிஞ்சுக்கறேன்” என்று கோரிக்கை வைக்கிறாள். பின்னணியில் பாட்டியின் புகைப்படம் மாலையுடன் தொங்குகிறது. தாத்தா தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். மிக நெகிழ்வான, நம்பவே முடியாத, உணர்ச்சிப்பூர்வமான கதை அது.
நதிக்கரையை ஒட்டிய அழகான ஊர் அது. சிவா என்கிற இளைஞன், ஆறு வயது சிறுவனின் மனநிலையில் உறைந்து போயிருக்கிறான். சிறுவயதில் நடந்த விபத்தின் விளைவு. ஒரு சிறுவனின் உற்சாகத்தோடும் உடல்மொழியோடும் ஊர் முழுவதும் சுற்றுகிறான். பலரும் அவன் மீது அன்பு செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் அவனை தங்களின் மகனைப் போலவே பாவிக்கிறார்கள். ‘கிறுக்குப் பய’ என்று சிலர் சிரிக்கிறார்கள். முட்டாள்தனமான காரியங்களைச் செய்தாலும் சிவாவின் அகம் அத்தனை பரிபூரண தூய்மையுடன் இருக்கிறது. அனைவருக்கும் நல்லது செய்யவே அவனுக்குத் தோன்றுகிறது. அவனுடைய உலகில் எதிரிகள் என்று எவருமில்லை. எல்லோருமே நண்பர்கள்தான்.
கணவனை இழந்து விதவைக் கோலத்தில் அந்த ஊருக்கு வருகிறாள் ஓர் இளம்பெண். கூடவே அவளது சின்னஞ்சிறிய மகன். காதல் திருமணம் என்பதால் கணவனின் தந்தை கௌரவம் பார்த்து வீட்டில் சேர்க்க மறுத்துத் துரத்தியடிக்கிறார். வேறு வழியில்லாமல் கூடப்பிறந்த அண்ணனின் வீட்டில் தங்குகிற அந்தப் பெண்ணுக்கு அண்ணியினால் தினம் தினம் மன உளைச்சல். தன் வெள்ளந்தியான சுபாவப்படி அவளைப் பார்த்து மனம் இரங்குகிறான் சிவா. அவளுடைய துன்பம் தீராதா என்று பரிதவிக்கிறான். “யாராவது தாலி கட்டி கூடவே நிழலா இருந்தாதான் அவளோட துன்பம் போகும்” என்று சிவாவின் பாட்டி தற்செயலாகச் சொல்வதைப் பிடித்துக் கொள்ளும் சிவா, கோயிலில் ராமர் கல்யாணத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் தாலியை எடுத்துச் சட்டென்று அவளுடைய கழுத்தில் கட்டி விடுகிறான்.
இந்த எதிர்பாராத சம்பவத்தைக் கண்டு லலிதா முதலில் அதிர்ச்சியடைகிறாள். ஊரார் சிவாவைக் கண்டிக்கிறார்கள், அடிக்கிறார்கள். சிவாவின் நல்லியல்புகளும் வெள்ளந்தியான குணமும் லலிதாவிற்கு ஏற்கெனவே தெரியும். ஆண் துணை இல்லையென்றால் ஒரு பெண் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டும் என்பதை அவள் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். எனவே சிவாவை, தனது கணவனாக, இரண்டாவது மகனாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறாள்.
ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. ஒருபக்கம் உண்மையிலேயே ஆறு வயது மகன். இன்னொரு பக்கம் இளைஞனின் உடலோடு மனதால் ஆறு வயதில் இருப்பவன். லலிதாவின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை உணர்ச்சிகரமான சம்பவங்களின் மூலம் விவரித்துச் சொல்லியிருக்கிறார் விஸ்வநாத்.
ஆறு வயது சிறுவனாக அசத்திய கமல்
சிவாவாக கமல். அவரது நடிப்பு பயணத்தில் இதுவொரு முக்கியமான பாத்திரம் எனலாம். இருபத்தைந்து வயது இளைஞன், ஆறு வயது சிறுவனாக நடிக்க வேண்டும். இந்தச் சவாலைக் கலைநயத்தோடு எதிர்கொண்டிருக்கிறார் கமல். ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபமோ, ஆட்சேபமோ இருந்தால் கையை பின்னால் உயர்த்தி அடிப்பது போல் பாவனை செய்வது சிவாவின் உடல்மொழியில் ஒன்று. இந்தப் பாவனை மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் இதே நிலைமைதான். கமலின் நடிப்பைச் சற்று கவனித்துப் பார்த்தால் தெரியும். கேரக்ட்டரின் படி, அவருடன் பழகுபவர்கள் எதைச் செய்கிறார்களோ, அதையே கவனித்து இவரும் செய்வார். சில விஷயங்கள் அப்படியே பழக்கமாகவும் தங்கி விடும். இது குழந்தையின் மனநிலை. யாராவது சிவாவின் கையை வலுக்கட்டாயமாக வாங்கி குலுக்கினால், சிவாவும் அதையே மறுபடி செய்வான். இப்படியாக பல விதங்களில் தன்னை உருமாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார் கமல்.
இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ‘துள்ளித் துள்ளி’ என்கிற பாடலில் கமல் நடனமாட வேண்டும். அவருக்குள் இருந்த நடனத்தன்மையின் நளினம், தன்னிச்சையாக வெளிப்பட, அவரைத் தடுத்து நிறுத்திய இயக்குநர் விஸ்வநாத், “நடனம் ஆடத் தெரியாதவன், நடனம் ஆடினால் எப்படியிருக்குமோ, அப்படி தத்துப்பித்தென்று இருக்க வேண்டும்” என்று சொன்னாராம். (பாலகிருஷ்ணாவின் நடனக்காட்சியை உதாரணமாகச் சொல்லியிருப்பாரோ, என்னவோ?!) குழந்தை காலடி எடுத்து வைப்பதைப் போலக் கமல் தடுமாறித் தடுமாறி நடனம் ஆடும் காட்சியை இந்தப் பாடலில் கண்டு ரசிக்கலாம். தெரிந்த விஷயத்தை, தெரியாதது போலச் செய்வதுதான் மிகச்சிறந்த நடிப்பு. ‘குணா’வில் வரும் கமல் வேறு. இதில் வரும் கமல் வேறு. அப்படியொரு அசாதாரண வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் கமலுக்கு டப்பிங் பேசியிருக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் அத்தனை பாந்தமாகப் பொருந்தியிருக்கிறது.
கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தைக் கண்ணியமாகக் கையாண்ட ராதிகா
கே.விஸ்வநாத்தின் திரைப்படங்களில் வரும் நாயகிகள் எப்போதுமே கண்ணியமான தோற்றத்தையும் கம்பீரமான அழகையும் கொண்டிருப்பார்கள். ஜெயப்பிரதா எத்தனையோ படங்களில், எத்தனையோ மொழிகளில் நடித்திருக்கலாம். ஆனால் ‘சலங்கை ஒலி’யில் வரும் ‘மாதவி’ ஜெயப்பிரதா எப்போதும் ஸ்பெஷல்தான். இதே போல்தான் ராதிகாவும். அவருடைய குறும்பான, கவர்ச்சிகரமான நடிப்பை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் இதில் ‘லலிதா’வாக கண்ணியம் துளிகூட குறையாமல் நடித்திருக்கும் ராதிகா என்பவர் நிச்சயம் வேறு. நேர்த்தியாகக் கட்டிய காட்டன் புடவை, படிய வாரிய சிகை, நெற்றியில் லட்சணமான குங்குமம் என்று தேவதையாகக் காட்சி தருகிறார். கத்தி மேல் நடப்பது போன்ற பாத்திரத்திற்கு முழுமையான நியாயத்தைத் தந்திருக்கிறார்.
ஒரு காட்சி. சிவாவை அதுவரை வளர்த்த பாட்டி, ராதிகாவின் கையில் ஒப்படைத்து விட்டு இறந்து போகிறார். அப்போது சிவா தனது முறைப்பெண்ணிடம் அசந்தர்ப்பமாகக் கேட்கிறான். “சிட்டி… எனக்கு பசிக்குது. சாதம் போடறியா?”. பக்கத்தில் பாட்டியின் சடலம் கிடக்கிறது. அப்போதுதான் சிவாவைப் பற்றிய முழுமையான சித்திரம் லலிதாவிற்குக் கிடைக்கிறது. தனது மகனை ஒரு பக்கம் அணைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிவாவையும் தன்னுடன் இழுத்து அணைத்துக் கொள்ளும் காட்சியில் ராதிகா வெளிப்படுத்தும் முகபாவம் அருமையானது. தாய்மையும் காதலும் எதிர்காலம் குறித்த கலக்கமும் கலந்த ஓர் அற்புதமான எக்ஸ்பிரஷனைத் தந்திருப்பார். இப்படி படம் முழுவதும் ராதிகாவின் ராஜ்ஜியம்தான்.
அகல் விளக்கு போல தன் பேரனைப் பொத்திப் பொத்தி அன்பு காட்டி வளர்க்கும் பாட்டியான நிர்மலாம்மாவின் நடிப்பின் அற்புதம் ஒருபக்கம் என்றால், தன் பேரனும் மருமகனும் சாலையில் பிச்சையெடுப்பதைக் கண்டு மனம் வெடித்து அழும் ‘டப்பிங்’ ஜானகியின் நடிப்பு இன்னொரு அற்புதம். லலிதாவின் மகன் ‘பாலசுப்பிரமணியமாக’ நடித்திருக்கும் மாஸ்டர் கார்த்திக்கின் பங்களிப்பும் அருமை. தானும் சிவாவும் சாலையில் இரந்து வாங்கும் காசுகளை, வேறு பிச்சைக்காரர்களுக்குச் சிவா தர்மம் செய்வதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு ‘யோவ்… வண்டியை நகர்த்துய்யா’ என்பது மாதிரி காட்டும் எக்ஸ்பிரஷன் முதற்கொண்டு பல காட்சிகளில் இந்தச் சிறுவன் அசத்தியிருக்கிறான்.
இந்தப் படத்தில் அசத்திய பல்வேறு நடிகர்கள்
கோலபுடி மாருதிராவ். வாவ்! என்னவொரு நடிகர்?! ‘ஹே ராம்’ திரைப்படத்தில் பிம்ப்பாக நடித்திருப்பார் அல்லவா? அவரேதான். இதில் தனியாக இருக்கும் ராதிகாவை ‘ஜொள்’ விட்டுக் கொண்டே துரத்திப் பிடித்து மடக்கும் காட்சியில் காமெடியும் சீரியஸூம் கலந்து நடித்திருப்பார். போலியான ‘வக்கீல்’ பாயின்ட்டுகளை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் ஆசாமியாக சூதி வீரபத்ரராவ் அசத்தியிருக்கிறார். இரண்டாவது மனைவியிடமும் மாமனாரிடமும் (மல்லிகார்ஜூன ராவ்) இவர் மாட்டிக் கொண்டும் படும் பாடு நகைச்சுவை ரகம். ராதிகாவின் பாசமிகு அண்ணனாக சரத்பாபுவும், கொடுமைக்கார அண்ணியாக ஒய்.விஜயாவும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
துணி துவைக்கும் தொழிலாளியாக தீபா சில காட்சிகளில் வந்து போகிறார். ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பெண்கள்தான் கமலிடம் விகல்பமில்லாமல் பழகுகிறார்கள். அவன் குழந்தைக்கு நிகரானவன் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தன் வருங்கால கணவனைக் கூட அண்டவிடாத தீபா, குளிக்கும் போது சிவாவை முதுகு தேய்த்து விட அழைக்கிறாள். ‘குடும்பத் தலைவர்’ என்னும் பொறுப்பை சிவாவிற்கு அழுத்தமாக உணர்த்துவதே இந்தப் பாத்திரம்தான். நம்ம ஊர் ‘மேஜர் சுந்தர்ராஜனும்’ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சில காட்சிகளில் வந்து போகிறார். ராதிகாவின் ‘மியூசிக் மாஸ்டராக’ ஜே.வி.சோமயாஜூலு நடித்திருக்கிறார். இயக்குநர் கேட்டுக் கொண்டதற்காக சில காட்சிகளில் நடித்தாராம். “சரிப்பா… உனக்கு ஒரு வேலை வாங்கித் தரேன்” என்று ஏதோவொரு இரக்கக் குணத்தில் இவர் கமலிடம் சொல்லி விடுவதும், நேரம் காலமே இல்லாமல் திரும்பிய இடத்தில் எல்லாம் கமல் இவரைத் துரத்துவதும் மென்நகைச்சுவைக் காட்சிகள்.
‘அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்’ என்று அவரது ரசிகர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். உண்மைதான். கமலின் பேரப்பிள்ளைகளுள் ஒருவராக அவரும் வந்து போகிறார்.
‘வரம் தந்த சாமிக்கு’… – இளையராஜாவின் தாலாட்டு
கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற மாஸ்டர்களைத் தனது திரைப்படங்களில் கணிசமாகப் பயன்படுத்தியிருக்கிறார் விஸ்வநாத். இதனால் சம்பந்தப்பட்ட படங்களின் பாடல்கள் மிக மிக உன்னதமாக அமைந்து விடும். ‘சிப்பிக்குள் முத்து’வும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் படத்தின் கூடுதல் அழகிற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும்.
குறிப்பாக ‘வரம் தந்த சாமிக்கு’ என்கிற அற்புதமான தாலாட்டுப் பாடல், ஒருவருக்குள் கிளர்த்தும் நெகிழ்வான உணர்வுகளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். தாயின் மடியில் படுத்திருப்பது போன்ற உணர்வை பி.சுசிலாவின் குரல் ஏற்படுத்துகிறது. மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் இதமான தாளம் ஒலிக்கும் இந்தப் பாடலின் மெட்டையே பின்னணி இசையாகப் பல இடங்களில் பயன்படுத்தி நெகிழ வைத்திருக்கிறார் ராஜா.
கமலுக்கு ராதிகா ராகம் கற்றுத் தரும் ‘துள்ளித் துள்ளி’ பாடல் கேட்பதற்கு இனிமையானது. எஸ்.பி.பியும் ஜானகியும் இந்த அனுபவத்தை இன்னமும் அழகாக்கியிருப்பார்கள். ‘ராமன் கதை கேளுங்கள்’ பாடலை கதாகாலட்சேப பாணியில் விதம் விதமாகப் பாடி அசத்தியிருப்பார் எஸ்.பி.பி. ‘மனசு மயங்கும்’ பாடல் காதோரத்தில் ஏகாந்தமாக ஒலிக்கக்கூடியது. சிவாவுக்கும் லலிதாவுக்கும் இடையிலான காமத்தைக் கண்ணியம் குறையாமல் காட்சியாக்கியிருப்பார் விஸ்வநாத். ‘கண்ணோடு கண்ணான’ பாடலின் பல இடங்களில் குழந்தையாகவே மாறி பாடியிருப்பார் பாலு. (தெலுங்கு வடிவத்தில் கேட்க இன்னமும் சிறப்பாக இருக்கும்).
பொதுவாக ‘டப்பிங் படங்களில்’ பாடல்கள் கேட்பதற்கு நிச்சயம் அந்நியத்தன்மையுடன் ஒலிக்கும். கேட்கும் போதே டப்பிங் படம் என்று தெரிந்து விடும். ஆனால் வைரமுத்துவின் வருகைக்குப் பிறகு இந்த நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டது. ‘இது அசலான தமிழ்ப்பாடலோ’ என்று தோன்ற வைக்கும் வகையில் அற்புதமாகப் பாடல்வரிகளை எழுதியிருக்கிறார் வைரமுத்து. அது உதட்டசைவிற்கும் மெட்டிற்கும் பொருத்தமாக இருக்கும் அதே வேளையில், கவித்துவமாகவும் இருக்கும். உதாரணமாக ‘மனசு மயங்கும்’ பாடலில் ‘இதழில் தொடங்கு… எனக்குள் அடங்கு…’ என்று பட்டையைக் கிளப்பியிருப்பார்.
வித்தியாசமான கதையை அற்புதமாக இயக்கிய விஸ்வநாத்
கதை கேட்கும் பேத்திக்கு தன் பிளாஷ்பேக்கை கமல் சொல்லி முடித்தவுடன், அவருடைய மகன் மூலமாக ராதிகா இறந்து போகும் காட்சி நினைவுகூரப்படும். மனைவியின் மரணத்தை ஏற்க முடியாமல் வயதான கமல் தத்தளிக்கும் அந்தக் காட்சி அற்புதமானது. இறுதியில், அந்த வீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல், மனைவியின் நினைவாகக் கமலும் அங்கேயே இறந்து விடுவது போன்ற டிராமாட்டிக்கான முடிவு இருக்குமோ என்று எதிர்பார்த்தால் இல்லை. தனது மகன்கள், மற்றும் பேரப்பிள்ளைகளுடன் கமல் வெளியூருக்குப் பயணப்படும் யதார்த்தமான காட்சியுடன் படம் நிறைவுறும். எம்.வி.ரகுவின் ஒளிப்பதிவில் நதிக்கரையோர காட்சிகளும் கோயில் காட்சிகளும் பாடல்களும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் நாயகன் வலுக்கட்டாயமாகத் தாலி கட்டுவதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். பிறகு நாயகனின் நல்லியல்புகளைப் பார்த்து நாயகி மனம் மாறுவாள். (உதாரணம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’). வலுக்கட்டாயமாக இந்தச் சம்பவம் நடந்தாலும், தாலி கட்டியவுடன்தானே வாழ முடியும் என்று பெண் நினைக்கிற இந்தப் பழைமைவாத சிந்தனை பல திரைப்படங்களில் இருக்கும். இந்தத் திரைப்படத்திலும் அது போன்ற சம்பவம் நடந்தாலும், நாயகியே நாயகனைக் குழந்தையாகவும் காதலனாகவும் ஏற்றுக் கொள்வது போன்ற கதையமைப்பை நேர்த்தியான கண்ணியத்துடன் இயக்கியிருக்கிறார் கே.விஸ்வநாத்.
சிறுவனின் உடல்மொழியோடு நடித்திருக்கிற கமலின் அற்புதமான பங்களிப்பு, சிக்கலான பாத்திரத்தைத் துளிகூட கண்ணியம் குறையாமல் நடித்திருக்கும் ராதிகா, இளையராஜாவின் அற்புதமான இசை, கே.விஸ்வநாத்தின் சிறப்பான இயக்கம் போன்ற காரணங்களுக்காக இன்றும் கூட பார்க்கும் வகையில் பரிசுத்தமாக இருக்கிறது, இந்த ‘சிப்பிக்குள் முத்து’.
+ There are no comments
Add yours