விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’ படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகியதாக தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.
‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு விஜய் – லோகேஷ் – அனிருத் இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 2022-ம் ஆண்டே இந்தப் படம் உறுதி செய்யப்பட்டு சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும், கடந்த மாதம் 30-ம் தேதி தான் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 31-ம் தேதி, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்களும் வைரலாகின.
இந்நிலையில், காஷ்மீரில் இருந்து த்ரிஷா சென்னை திரும்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவி வந்தது. படத்தில் ப்ரியா ஆனந்திற்கு தான் முக்கியத்துவம் என்பதால், லோகேஷ் கனகராஜ் உடன் சண்டையிட்டு த்ரிஷா சென்னை திரும்பிவிட்டதாகவும், தனது போர்ஷனை 3 நாட்களில் முடித்துவிட்டுதான் த்ரிஷா திரும்பியதாகவும் வதந்திகள் பரவின. மேலும், டெல்லி விமான நிலையத்தில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலானதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர ‘லியோ’ படம் சம்பந்தமான சில ட்வீட்டுகளை த்ரிஷா டெலிட் செய்துவிட்டதால், அவர் ‘லியோ’ படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், இதற்கெல்லாம் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விமானத்தில் செல்லும்போது, பனிப்படர்ந்த காஷ்மீரின் வீடியோ மற்றும் சில உணவு வகைகளை பகிர்ந்துள்ளார். இதேபோல் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், ‘லியோ’ படத்தில் த்ரிஷா இருப்பதை தனியார் சேனலுக்கு அளித்தப் பேட்டியின் மூலம் உறுதி செய்துள்ளார்.
காஷ்மீரில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படம் பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு எதிர்பார்த்ததைவிட அளவுக்கதிமான மைனஸ் டிகிரியில் குளிர் நிலவுவதால், தனது போர்ஷன் வரும் வரை டெல்லி சென்று அங்குள்ள ஓட்டலில் நடிகை த்ரிஷா தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இன்று மீண்டும் அவர், காஷ்மீர் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு மட்டுமில்லை. நடிகை த்ரிஷாவுக்கும் இது 67-வது படமாகும். கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘குருவி’ படத்திற்குப் பிறகு 5-வது முறையாக இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours