வாழ்க்கையில் பொறுப்பே இல்லாமல் இருக்கும் ஆள், தந்தையாக ஆனதுக்குப் பிறகு, வாழ்க்கை அவரை எப்படி மாற்றுகிறது என்பதே டாடா படத்தின் ஒன்லைன்.
மணிகண்டன் – சிந்து (கவின் – அபர்ணா தாஸ்) காலேஜ் மேட்ஸ். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ரிலேஷன்ஷிப், சிந்து கர்ப்பமாவது வரை செல்ல, பின் இவர்களது உறவில் சிக்கல் ஆரம்பிக்கிறது. முதலில் குழந்தை வேண்டாம் என சொல்லும் மணிகண்டன் பிறகு சம்மதிக்கிறார். ஆனால் இந்த ஜோடிக்கு அவர்களது குடும்பத்தினரின் ஆதரவு இல்லை. இருந்தாலும் கிடைத்த ஒரு வேலைக்கு சென்று செலவுகளை சமாளிக்கிறார் மணி.
போக போக குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கிறது, பணத்தேவையும் அதிகரிக்கிறது. அதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருகிறது. அந்த சண்டை, குழந்தை பிறந்ததும் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு மணியின் வாழ்க்கையை விட்டு சிந்து செல்வது வரை முற்றுகிறது. இப்போது குழந்தையை வளர்க்கும் பொறுப்பு மணிக்கு வருகிறது, கூடவே சிந்து மீண்டும் மணியின் வாழ்க்கையில் வருகிறார். இதன் பிறகு மணி எப்படி ஒரு பொறுப்பான அப்பாவாக மாறுகிறார், சிந்து – மணி இடையேயான பிரச்சனை என்னவாகிறது என்பதெல்லாம் தான் ‘டாடா தி அப்பா’ படத்தின் மீதிக்கதை.
படம் துவங்கி 25 நிமிடங்களுக்குள்ளாகவே மேலே இருக்கும் கதை சொல்லப்பட்டு, வேறொரு இடத்திற்கு நகர்கிறது படம். இது போன்ற கதையை நாடகமாக காட்டி, அழுது வடியும் சீன்களை வைத்துக் கொண்டு இல்லாமல் மிக யூத்ஃபுல் ஆக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் பாபு. படம் முழுக்க இருக்கும் லைவ்லி, ஜாலி மோட்-ஐ இறுதி வரை தக்க வைத்திருப்பதும் படத்தின் பலம். நடிகரகாக, கவினுக்கு இது சிறப்பான களம். சீரியஸான காட்சிகள், எமோஷனலான காட்சிகள், ஜாலியான காட்சிகள் என அனைத்திலும் பக்காவாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு ஆட்டோவில் பயணம் செய்யும் காட்சியை சொல்லலாம். படத்தின் காட்சியாகவும் சரி, அதில் கவினின் நடிப்பாகவும் சரி பிரமாதமாக அமைந்திருந்தது. சில காட்சிகளில் நடிக்கும் போது விஜய்யின் சாயல் வருவதை மட்டும் அடுத்தடுத்த படங்களில் கவின் சரி செய்து கொள்ள வேண்டும்.
நாயகியாக வரும் அபர்ணா தாஸ் முதல் பாதி முழுக்க, அழுது கொண்டே இருக்கும் பலவீனமான ஆளாக, இரண்டாவது பாதியில் சிடுசிடுவென எரிந்து விழும் சீரியசான கதாபாத்திரமாக வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். ஹரீஷ் குமார், விடிவி கணேஷ், கவினின் டீம் மேட்ஸாக வரும் குழு என அனைவரும் படத்தின் ஜாலி போர்ஷனுக்கு உதவியிருக்கிறார்கள். ஆதித்யா ரோலில் நடித்திருந்த சிறுவனும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். சிறிய ரோலில் வந்தாலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா வரும் காட்சிகள் அழுத்தமாக இருந்தது.
எழில் அரசு ஒளிப்பதிவு, ஜென் மார்டின் இசை இரண்டும் படத்தின் ஃப்ரெஷ் ஃபீலுக்கு உதவியிருக்கிறது. இது தாண்டி எழுத்தாக சில இடங்களும் படத்தில் சிறப்பாக இருந்தது. அழுகையே வராது என சொல்லும் ஹீரோ அழும் இடம்; வாழ்க்கையில் எந்தப் பொறுப்பும் இல்லாத ஒருவன், தன்னுடைய குழந்தைக்காக எப்படி மாறுகிறான் என சொல்வது; இதோடு பெருவாரியான இந்தியக் குடும்பங்களில் நிகழும் `குழந்தை பிறந்ததும் ஆண்கள் வேலைக்கு செல்வார்கள், பெண்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள், வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும், வேலையையும் குடும்பத்தையும் கவனிப்பார். அந்த இடத்தில் ஒரு ஆண் இருந்தால் எப்படி இருக்கும்’ என்ற முரணும் சுவாரஸ்யமாக இருந்தது.
படத்தில் குறைகளும் இருக்கிறதுதான். இந்தப் படமே ஒரு மனிதன் எப்படி மாறுகிறான் என்பதைப் பற்றியது. அவன் கடந்த காலத்தில் மிக மோசமான சுபாவம் உள்ளவன், சுயநலவாதி. அவனுடைய குணம் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் மையம் எனும் போது, அதை சரியாக படத்தில் காட்டவில்லை. வெறுமனே ஒரு பாடல் மாண்டேஜை போட்டு பாருங்க ஹீரோ பரட்டத் தலைய ஹேர் கட் எல்லாம் பண்ணிருக்கான், “நாதஸ் திருந்திட்டான்” என்ற அளவிலேயே அவனது மாற்றம் காட்டப்படுகிறது. அதேநேரம் குழந்தையை விட்டு ஏன் அபர்ணா சென்றார் என்று சொல்லப்படும் காரணமும் யூகிக்கும் படியாகவும், ஏற்றுக்கொள்ளும்படியாகவும் எழுதப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது.
சில உணர்ச்சிமயமான காட்சிகள் தாண்டி, ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் உணர்வு என்ன என்பது எங்குமே சொல்லப்படவில்லை. அதற்கு காரணம், அந்தக் குழந்தை அவனுடைய வாழ்க்கையில் வந்த பிறகு என்னென்ன அழகான தருணங்கள் வந்தது எனப்தை நோக்கி மட்டுமே கதை பயணிக்கிறது. ஆனால் கதையில் வரும் எந்தக் கதாபாத்திரங்களும் சந்திக்கும் சிக்கலோ, மனவோட்டமோ சொல்லப்படவில்லை.
இந்த மாதிரி குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், எந்த விதத்திலும் சோர்வில்லாமல் நகரக்கூடிய ஒரு படம். கண்டிப்பாக ஜாலியாக பார்க்கக் கூடிய எமோஷனல் கலந்து சொல்லப்படக் கூடிய ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாகியிருக்கிறது இந்த ‘டாடா தி அப்பா’.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours