‛அட்டக்கத்தி’ தினேசுக்கு அடுத்த பரீட்சை
08 பிப், 2023 – 13:10 IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான தினேசுக்கு சமீபகாலமாக குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. 2016ம் ஆண்டு அவர் நடித்த விசாரணை, ஒரு நாள் கூத்து, கபாலி படங்கள்தான் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த உள்குத்து, மெர்லின், களவாணி மாப்பிள்ளை, நானும் சிங்கள்தான் படங்கள் அவருக்கு பயன்படவில்லை. அவர் நடித்து முடித்துள் ஜே பேபி, பல்லு படமாக பார்த்துக்கணும், தேரும் போரும் படங்கள் வெளிவரவில்லை.
இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தல் தினேஷ் நடிக்கிறார். அதியன் ‘இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கியவர். தினேசுடன் கலையரசன், ஷபீர், பாலசரவணன், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார், ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். ஒசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
தண்டகாரண்யம் என்பது சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு அடர்ந்த மலைப்பகுதியாகும், அங்கு கடும் குற்றச் செயல்களில் ஈடுபடும் பழங்குடியின மக்கள் வாழ்வதாக கூறப்படுவதுண்டு. இந்த படம் அந்த பகுதியின் கதையா, அல்லது அதுபோன்று இங்குள்ளவர்களின் கதையா என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக்கு போராடும் அட்டகத்தி தினேசுக்கு இந்த படம் அடுத்த பரீட்சையாக இருக்கும் என்று தெரிகிறது.
+ There are no comments
Add yours