தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளும் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், தன் மனதில் படும் கருத்துகளைத் தயங்காமல் பேசுவதும், அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் வழக்கம்.
அந்த வகையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், விவேக் அக்னி ஹோத்திரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் ராஜ், “’பதான்’ படத்தைத் தடை செய்ய நினைத்தார்கள். ஆனால் அப்படம் வெளியாகி 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனையைப் புரிந்து வருகிறது.

இந்தப் படத்தை எதிர்த்த மதவெறியர்களால் மோடியின் படத்தை 30 கோடி ரூபாய்க்குக் கூட ஓடவைக்க முடியவில்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற பிரசாரப் படம் ஒன்றை எடுத்து வெளியிட்டார்கள். அந்தப் படத்தைச் சர்வதேச ஜூரி எல்லாம் கூட விமர்சித்திருந்தனர். அப்படி இருந்தும் இவர்களுக்குப் புத்தி வரவில்லை. இதில் அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வேறு ‘ஏன் என்னுடைய படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை’ என்று கேட்கிறார். இந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
+ There are no comments
Add yours