‘திருடா திருடா’ படத்தின் பறக்கும் ஜீப்பிலிருந்து பறக்கும் கோழிகள், வீரபாண்டிக் கோட்டையிலே பாடலின் லைட்டிங், ஒற்றை லொகேஷனில் எடுத்த ராசாத்தி பாடல், வைட் ஷாட்டில் தொடங்கி மெல்ல க்ளோஸ் அப் காட்சிகளாக நகரும் ‘குருதிப்புனல்’ படம் என இவரி்ன் காட்சியமைப்பு குறித்து பல சினிமா ரசிகர்கள், விமர்சர்கள், வாழ்த்தியும் விமர்சித்துமிருக்கின்றனர்.
கவிதை, ஓவியம் போல உணர்ந்து மட்டுமே அறியமுடிகிற ஒன்றாகவே ஒளிப்பதிவும், சினிமாவும் எஞ்சி நிற்கின்றன. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய சவாலே சிந்தனை ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் தன்னை காலத்துக்கேற்ப நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும். பி.சி. அதில் கைதேர்ந்தவர்.
மணிரத்னம் வெவ்வேறு கால இடைவெளிகளில் இயக்கிய மூன்று காதல் படங்களான ‘மௌன ராகம்’ – ‘அலைபாயுதே’ – ‘ஓ காதல் கண்மணி’ இதற்கு சரியான உதாரணம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான காதல் கதை ஒவ்வெவொன்றும் படமாக்கப்பட்ட காலமும் வேறானவை. ‘அலைபாயுதே’வின் ரயில்கள் காட்சிப்படுத்தப்பட்டதற்கும், ‘ஓகே கண்மணி’யின் ரயில்கள் காட்சி்ப்படுத்தப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியும்.
பச்சை நிறமே பாடலில் வண்ணங்களை கையாண்ட விதமும், ஓகே கண்மணியில் கலர் பேலட்களில் அவர் நிகழ்த்தியதும், ஸ்லோ ஷட்டர் ஸ்பீடு காட்சிகளும் உதாரணம். ஒற்றை போர்வைக்குள் ஊடல் கொள்ளும் நாயகன் – நாயகியை காதல் மொழியிலும், கடற்கரையில் அதே நாயகியை காதலன் பிரிந்து தவித்து தேடும்போது தவிப்பையும் காட்சிப்படுத்த அந்த ஒளியமைப்பும், காட்சிப்படுத்திய விதமும் முக்கிய பங்ககாக இருக்கும்.
பிலிம்களில் படம் எடுத்த காலத்தில் `அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அவர் கமலை எப்படி குள்ளமாகக் காட்சிப்படுத்தினார் என்பதும், `பா’ படத்தின் குட்டையான அமிதாப் பச்சனும் இன்று ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு பல விதமான யோசனைகளை பலரும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனுக்கு அவனது கலை சார்ந்த மிகப்பெரிய வெகுமதி அல்லவா இது.
தொழில் சார்ந்த இந்த திறன்களை, வெற்றிகளைக் கடந்து தான் கற்ற, தனக்கு கைவந்த கலையை பலருக்குக் கற்றுக்கொடுத்து அவர்களையும் துறை சார்ந்த ஜாம்பவான்களாக்கியிருப்பதும், கலை குறித்தான பி.சி-யின் பார்வையும்தான் அவரை ஒரு மதிப்புமிக்க கலைஞனாக உன்னதமான இடத்தில் அமர்த்தி வைத்திருக்கின்றன.
+ There are no comments
Add yours