ஏராளமான கனவுகள் கொண்ட நடன ஆசிரியர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் பள்ளி ஆசிரியர் ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நடக்கிறது. பழமைவாதம் மண்டி கிடக்கும் புகுந்த வீட்டில் கணவன், மாமனார் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சமையல் தேவைப்படுகிறது.
சமையலறையே சகலமும் என ஆகிப்போன அவரை, ‘நீங்கள்லாம் ஹோம்மினிஸ்டர்ஸ்மா’என்று சொல்லி கிச்சனுக்குள் அடைத்து வைக்க, ஒரு கட்டத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஐஸ்வர்யாவுக்கு. அவர் என்ன செய்தார் என்பதுதான் இந்த 95 நிமிட படத்தின் கதை.
மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை, அப்படியே தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ஒரிஜினலில் இருந்த காரம் குறையாமல் அதைக்கொடுக்கவும் முயன்றிருக்கிறார். எளிமையான கதை என்றாலும் இந்திய குடும்பஅமைப்பில் பெருகி கிடக்கும் ஆணாதிக்கக் கொடுமைகளையும் அந்தக் கொடுமையால், சமையல் அறைக்குள் அடைந்துகிடக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் மனப்போராட்டங்களையும் வீரியமாகப் பதிவுசெய்கிறது படம். ஒவ்வொரு வீட்டிலும்நடக்கும் கதை என்பதால், அனைவராலும் எளிதில் கதையோடு ஒன்றிவிட முடிகிறது.
‘ஏன் சார் அம்மா, அப்பா ரெண்டு பேருமே, குடும்பத் தலைவரா இருக்கக்கூடாதா?’, ’அவருக்குக் காரம் பிடிக்கும். இவருக்குக் காரம் பிடிக்காது; அப்ப உங்களுக்கு?’ என்று மாமியாரிடம் கேட்கும்இடத்தில் எதையும் சொல்லாமல் ருசிமறந்து போன ஒரு தாயின் மன உணர்வை வெளிப்படுத்துவது என பலஇடங்கள் நின்று கவனிக்க வைக்கின்றன. அதே நேரம் சமூகத்திடம் விடை தேடி நிற்கும் கேள்விகளாகவும் அவை மாறிவிடுகின்றன.
மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆணாதிக்கம் பூத்துக்கிடக்கும் வீட்டில் தன் இயலாமையை வெளிப்படுத்துவதில் இருந்து இறுதியில் வெடித்து எழுவது வரை சிறப்பாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகான சராசரி இளம் பெண்களின் மணவாழ்க்கை அவர் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
சுயநலமிக்க ஆசிரியரான ராகுல்ரவீந்திரன் சில இடங்களில் உணர்ச்சிகளைவெளிப்படுத்த தவறினாலும் இந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாகவே பொருந்துகிறார். ‘சாதத்தை விறகு அடுப்புல வைம்மா’,‘துணியை வாஷிங் மெஷின்ல போடாதம்மா’ என சதா தொல்லைக் கொடுக்கும் மாமனார் நந்தகுமார், சிலகாட்சிகள் வந்துபோகும் கலைராணி, யோகி பாபு உட்பட துணைக் கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை தெளிவாக்கி இருக்கிறார்.
ஒரு வீடும் அதன் சமையலறையின் நீள அகலங்களும்தான் காட்சிகள் என்றாலும் அதை, பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவு கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது. ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட்டின் பின்னணி இசை, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு படத்துக்குப் பெரிதும் உதவி இருக்கின்றன.
காய்கறி நறுக்குவது உட்பட வீட்டு வேலைகளைத் திரும்பத் திரும்பச் காட்டுவது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துவது, பல காட்சிகள் செயற்கையாக நகர்வது போன்ற குறைகள் இருந்தாலும் பேசப்பட வேண்டிய கதைக்காக, இந்த ‘கிச்சனை’ வரவேற்கலாம்.
+ There are no comments
Add yours