டோக்கியோவிலிருந்து க்யோட்டோவுக்குச் செல்லும் புல்லட் ரயிலிலிருந்து பெட்டி ஒன்றை எடுக்கும் அசைன்மென்ட் லேடிபக்கிற்கு வருகிறது. வழக்கமான ஏஜென்ட் அன்று வர இயலாமல் போக, மாற்று நபராக உள்ளே நுழைகிறார் லேடிபக். உள்ளே சென்று ஒரு பெட்டியை எடுத்துவிட்டு வெளியேற வேண்டும். அதே சமயம், லேடிபக்கிற்குத் தெரியாமல் இன்னும் சில கொடூர கொலைகாரர்களும், அந்த ரயிலினுள் இருக்கிறார்கள். குற்றங்களின் ஒட்டுமொத்த சிண்டிகேட்டின் தலைவரான ஒயிட் டெத் டேஞ்சரின், லெமன் இரு ஹிட்மேன்களை ரயிலுக்குள் அனுப்பியிருக்கிறார். இது இல்லாமல், அப்பாவி வேடத்தில் இருக்கும் ஒரு கொலைகார சிறுமியும் உள்ளே இருக்கிறாள். இவர்கள் போக, சரி சரி… இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.
10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பெட்டியையும், ஒயிட் டெத்தின் மகனையும் க்யோட்டோவில் இருக்கும் கும்பலிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் அசைன்மென்ட். ஆனால், இந்த ரயில் சில இடங்களில் மட்டும்தான் நிற்கும். அதுவும் சில நொடிகள் மட்டுமே நிற்கக்கூடிய புல்லட் டிரெயின். புல்லட் டிரெயினின் வேகத்தில் செல்லும் திரைக்கதையில், இந்த நபர்கள் கடந்து வந்த பாதை, எப்படி இங்குச் சங்கமித்தார்கள், அடுத்து என்ன நடக்கிறது எனப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே சீறிப் பாய்கிறது இந்த ‘புல்லட் டிரெயின்’.
+ There are no comments
Add yours