Bobby Simha vasantha mullai movie trailer released | இனி இது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் பாபி சிம்ஹா உறுதி

Estimated read time 1 min read

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மீரா பர்தேசி நடித்திருக்கிறார். நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘நேரம்’, ‘பிரேமம்’ படப் புகழ் ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ரா‘ஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹாவும், எஸ். ஆர். டி. எண்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம் தல்லூரியும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, இயக்குநர் ரமணன் புருஷோத்தமா, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், கூடுதல் திரைக்கதை வசனம் எழுதிய பொன்னிவளவன், நடிகர்கள் மணிகண்ட பிரபு, சரத் ரவி மற்றும் படத்தின் நாயகன் சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராம் தல்லூரி பேசுகையில், ”ரவி தேஜா உடனான படப்பிடிப்பில் தான் சிம்ஹாவை முதலில் சந்தித்தேன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற திறமையாளர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல், மிக எளிமையாக படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றினார். அவரை சந்தித்த உடனேயே, உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். சில மாதங்கள் கழித்து, என்னை தொடர்பு கொண்டு, ‘கதை ஒன்று இருக்கிறது. கேளுங்கள்’ என்றார். அடுத்த நாள் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்திப்பு நடந்தது. அதன் போது இயக்குநர், சிம்ஹா, நான், என்னுடைய மகன் ஆகியோர் இருந்தோம். இயக்குநர் கதையை விவரித்துக் கொண்டே இருந்தார். இந்த கதையை கேட்ட முதல் பார்வையாளரான என்னுடைய மகன், கதையைக் கேட்டு விட்டு,’ இது ஆங்கில படம் போல் உலக தரத்தில் இருக்கிறது’ என்றார். ஏனெனில் இது புதுவித ஜானரிலான திரைப்படம். இது போன்ற கதை சொல்லும் உத்தி இதற்கு முன் எந்தத் திரைப்படத்திலும் வரவில்லை. அந்தத் தருணத்திலேயே நான் ‘வசந்த முல்லை’ படத்தைத் தயாரிக்க தீர்மானித்து விட்டேன். இது கமர்சியலா..? கமர்சியல் இல்லாததா..? என்ற எல்லையை கடந்து, இது புது வித ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம். இது ரசிகர்களை கவரும்.

மேலும் படிக்க | மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா?

 

ரேஷ்மி சிம்ஹாவின் கடும் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நாட்கள் குறைவு என்றாலும், இந்த திரைப்படம் மூன்றரை ஆண்டு கால உழைப்பில் உருவாகி இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர்கள் ஆர்யா மற்றும் ரக்ஷித் ஷெட்டிக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.  தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பேசுகையில், ” நீண்ட நாட்கள் கழித்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சிம்ஹாவும், இயக்குநர் ரமணனும் சொல்லும்போது மிகவும் பிடித்திருந்தது.

வெற்றி பெற்றிருக்கும் போது, ஏராளமான வாய்ப்புகளும், நிறைய நண்பர்களும் உடனிருப்பார்கள். ஆனால் வெற்றிக்காகக் காத்திருக்கும் போது, நம் மீது நம்பிக்கை வைத்து பயணிப்பவர்கள் குறைவு. அந்த வகையில் தயாரிப்பாளர் ராம், எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இன்று வரை குறையவில்லை. சிம்ஹா மீதும், எங்கள் நிறுவனம் மீதும், இயக்குநர் மீதும் அபார நம்பிக்கையை வைத்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்த படைப்பு தயாராவதில் கால தாமதமானது. இதன் போது எங்கள் குழுவினரிடையே ஏற்பட்ட கோபம், அன்பு, காதல், சண்டை என அனைத்தையும் எதிர்கொண்டோம். தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். பொதுவாக 35 நாட்கள் வரை படப்பிடிப்பில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். அதன் பிறகு வணிக ரீதியான நட்பை தொடர்வோம். ஆனால் இந்த ‘வசந்த முல்லை’ திரைப்படம் முழுமையடைய மூன்றரை ஆண்டுகளானது. அதனால் இந்த படக் குழுவினருடைய நட்பு பிரத்யேகமானது. இந்த நாளுக்காக காத்திருந்தோம். காலதாமதமாக வெளியானாலும் சரியான தருணத்தில் இப்படம் ரசிகர்களை சென்றடைகிறது.

படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது, மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து படங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் புதுவித பாணியில் தயாராகி இருக்கும் ‘வசந்த முல்லை’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.  இயக்குநர் ரமணன் புருஷோத்தமா பேசுகையில், ” முகநூல் மூலமாக  சிம்ஹா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவரை சந்தித்தேன். ஏதாவது கதைகளை வைத்திருக்கிறீர்களா? நாம் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான், இன்று எனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் மேடை. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை தொடங்குவதற்கு ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, ரஜினி தல்லூரி ஆகியோர் அளித்த நம்பிக்கையான வாக்குறுதியும் ஒரு காரணம்.

‘வசந்த முல்லை’ எனும் படத்தின் திரைக்கதையின் போக்கில் ஒரு திருப்புமுனைக்குப் பிறகு, இந்த கதை ஒரே இரவில் நடைபெறும். மலை பாங்கான பகுதி… இருட்டு… தொடர் மழை.. இந்த பின்னணியில் நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது. அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி, அந்த குளிரில், ஒவ்வொரு காட்சியிலும் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நடிக்க வேண்டியதிருந்தது. முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அளித்த நாயகி கஷ்மீரா பர்தேசிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் உயிர்நாடி இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசை தான். அவருக்கும் திரில்லர் ஜானரில் இசையமைப்பது முதல் முறை என்பதால், அனுபவித்து ஆத்மார்த்தமான உழைப்பை வழங்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கலை இயக்குநர், படத் தொகுப்பாளர், சண்டை பயிற்சி, ஆடை வடிவமைப்பாளர், ‌விளம்பர வடிவமைப்பு, பாடலாசிரியர், ஒலி வடிவமைப்பாளர், கூடுதல் திரைக்கதையாசிரியர் பொன்னிவளவன், மக்கள் தொடர்பாளர் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். பிடித்த விசயங்களை நேர்த்தியான படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் நாயகன் சிம்ஹா பேசுகையில், ” சில ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ‘மகான்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது. தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன். 

பத்திரிக்கையாளர்களின் கரங்களின் மூலம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் முதல் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான். மக்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதில் உங்களுடைய எழுத்துக்களுக்கும், கருத்துகளுக்கும்  பெரும் பங்களிப்பு உண்டு.  கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி  ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.  தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.  சிவ ராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும், அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.

‘டிஸ்கோ ராஜா’ எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ராம் தல்லூரி எனக்கு அறிமுகமானார். நட்புடன் பழகத் தொடங்கியவுடன், படங்களில் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். இணைந்து பணியாற்றலாம் என்று சம்மதம் தெரிவித்து, இயக்குநர் ஒருவரை தேர்வு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதை முழுமையாகாததால், வேறு கதைகளை தேடத் தொடங்கினோம். நான் இயல்பாகவே வேகமாக முடிவெடுப்பேன். அந்தத் தருணத்தில் முகநூலில் குறும்படம் ஒன்றை பார்த்தேன். அருண் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த குறும்படம் அது. நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குநரான ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரிய வந்தது. அவரிடம், ‘முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும், கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது.

பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.  தயாரிப்பாளர் ராம் தல்லூரி உதவியுடன் ஒரு வணிக ரீதியான திரைப்படத்தை வழங்கி இருக்க முடியும். ஆனால்  புதுமையான விசயத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் ‘வசந்த முல்லை’யை உருவாக்கி இருக்கிறோம்.

ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால்… அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது. பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.  முன்னதாக உயிர் நீத்த பிரபல பின்னணி பாடகி ‘பத்ம பூஷன்’ வாணி ஜெயராம் மற்றும் இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Lata Mangeshkar: இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு முதலாமாண்டு அஞ்சலி! ஆராரோ ஆரிரோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours