காற்றில் கலந்தது கானக்குயில் – காவல்துறை மரியாதைக்கு பின் வாணி ஜெயராம் உடல் தகனம் | vani jairam body Cremation after police tribute

Estimated read time 1 min read

மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உடலுக்கு குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று (பிப்ரவரி 4) காலமானார். அவருக்கு வயது 78. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி, என 19க்கும் அதிகமான மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். 1000-க்கும் அதிகமான படங்களில் 10,000-க்கு அதிகமான பாடல்களை பாடிய வாணி ஜெயராமுக்கு, இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 3 முறை வென்றவர். தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.

‘ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’,‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’, ‘ஏபிசி நீ வாசி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் பாடல்களில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயமிருந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என கூறி காவல்துறை தரப்பில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து வாணி ஜெயராம் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 10 போலீஸார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வாணி ஜெயராம் உடலுக்கு மரியாதை அளித்தனர். தொடர்ந்து சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours