காலமானார் டி.பி.கஜேந்திரன்.. அவர் இயக்குநரானது எப்படி தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் நன்கு பதிந்திருந்த டி.பி.கஜேந்திரன் தற்போது மறைந்துவிட்டார் என்ற செய்தி கிட்டியிருக்கிறது. 68 வயதான கஜேந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1985ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் 1988ம் ஆண்டுதான் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த டி.பி.கஜேந்திரன், இயக்குநரும் நடிகருமான விசுவிடமும் உதவி இயக்குநரகாக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

தனக்கு கிடைத்த இயக்குநர் வாய்ப்பு குறித்து பத்திரிகைகளில் மிகவும் நெகிழ்ச்சியுடனேயே பகிர்ந்திருப்பார் கஜேந்திரன். அதன்படி, விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படம் வெளியான சமயத்தில் இயக்குநரும் தயாரிப்பாளருமான மறைந்த ராம நாராயணனன் கஜேந்திரனிடம், “விசுவின் கால்ஷீட் வாங்கி வந்தால் இயக்குநர் வாய்ப்பு தரேன்” என்றிருக்கிறார்.

பின்னர் விசுவிடம் கேட்டபோது, “உனக்காக பண்ணமாட்டேனா? எத்தனை நாள் வேணும்” என சொல்ல இப்படியாக டி.பி.கஜேந்திரனுக்கு அமைந்ததுதான் வீடு மனைவி மக்கள் படத்தை இயக்கும் வாய்ப்பு. இந்த படத்தை கன்னடத்திலும் கஜேந்திரனே ரீமேக் செய்திருப்பார்.

எதார்த்தமான படங்களை இயக்க வேண்டும் என முடிவெடுத்து பின்னாளில் வெளியான படங்கள்தான் எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், சீனா தானா போன்றவை.

இயக்குநரகாக 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருந்தாலும், நடிகராக பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டி.பி.கஜேந்திரன். குறிப்பாக பம்மல் கே சம்பந்தம் படத்தில் இயக்குநராகவே “சிவன் பபிள்லாம் விட மாட்டாரு சம்பந்தம்.. டிராலி ஃபார்வேர்ட்..” என சொல்வதெல்லாம் 90s கிட்ஸ்களின் நாஸ்டால்ஜிக் நினைவுகளாகவே இருக்கும்.

திரைத்துறை டிஜிட்டல் மயமாக மாறிய பிறகு சினிமாவில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்த டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமத்தில் அவரது தந்தை வாடகை ரூம்களை நடத்தி வந்தே அந்த குடியிருப்பை லாட்ஜாக மாற்றி இவர் ஏற்று நடத்தி வந்தார். வாடகை ரூமாக இருந்த போது அந்த இடத்துக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் பலரும் இங்குதான் தங்குவது வாடிக்கையாம்.

லாட்ஜாக மாற்றிய பிறகு அதன் முதல் தளத்துக்கு விசுவின் பெயரையும், இரண்டாவது தளத்துக்கு பாலச்சந்தரின் பெயரையும், மூன்றாவது தளத்துக்கு பாரதிராஜாவின் பெயரையும் வைத்துள்ளதாகவும் டி.பி.கஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நேற்று (பிப்.,04) பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராமும், பிப்ரவரி 3ம் தேதி பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் மறைந்த செய்தியின் சுவடே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், அடுத்ததாக கஜேந்திரனின் மறைவு செய்தியும் வந்தது திரைத்துறையினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours