பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
அசிமை அமர வைத்து ஷோபனா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். “உங்க பேச்சுதான் உங்க பாசிட்டிவ். விடற வார்த்தைகள்தான் நெகட்டிவ்” என்று ஷோப்ஸ் சுட்டிக் காட்ட “யெஸ். எனக்குப் புரியுது. அந்த நேரத்துச் சூட்டில் வார்த்தைகளை விட்டு விடுகிறேன்.” என்று தன்னை உணர்ந்தது போல் பேசிய அசிம், பேச்சு.. ஏச்சு.. மூச்சு.. என்று ரைமிங்கில் பிளந்து கட்டினார். விஷயமே இல்லாமல், எதுகை, மோனையில் பேசி தமிழ்ச் சமூகத்தை மயக்குவது ஒரு ஆதிகாலத்து டெக்னிக். அடுத்ததாக கதிரவனை அமர வைத்த ஷோபனா, “போல்டா பேசுங்க.. ஜெயிக்கற வேகமே உங்க கிட்ட இல்லையே?” என்று சுட்டிக்காட்ட “ஆம். மற்றவர்களை முன்னே வெச்சட்டு நான் பின்னாடி நிக்கறேன்” என்று புன்னகையுடன் வாக்குமூலம் தந்தார் கதிர். (தெய்வீகச் சிரிப்பய்யா உமது!).
வழக்கம் போல் அணிலைக் காட்டி விட்டு ‘Shoot the குருவி’ பாடலைப் போட்டார் பிக் பாஸ். நாள் 94 அணிலுடன் விடிந்தது. தியாகம் செய்யும் டாஸ்க் தொடர்பாக, கடந்த சீசன்களில் எல்லாம் அனல் பறந்தது. ஆனால் இதில் கருணையோடு எளிதான சவால்களைத் தந்து சம்பிரதாயத்திற்கு நடத்தி முடித்து விட்டார் பிக் பாஸ். கதிரவன் தனது ஷூவை பெயிண்ட்டில் முக்க வேண்டுமாம். பழைய ஷூவை எடுத்து கணக்கு காண்பிக்காமல், தனக்குப் பிடித்த, புதிய வெள்ளை ஷூவை கதிரவன் தியாகம் செய்தது சிறப்பு. “சோப் வாட்டர்ல போட்டா கறை போயிடுமில்ல” என்று கதிரவனின் காலணிக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் ஷிவின்.
‘அணிந்திருக்கும் ஆடையைத் தவிர அனைத்து உடைகளையும் ஒப்படைத்து விட வேண்டும். மற்றவர்களின் உடையை அணிய வேண்டும்’ என்பது ஏடிகேவிற்கு அளிக்கப்பட்ட சவால் ‘வெளிய அனுப்பறதுக்கு ஒத்திகை பார்க்கறாங்களோ” என்று ஜாலியாக சந்தேகப்பட்டார் ஏடிகே. பட்டாபட்டி அண்ட்ராயர் தவிர அனைத்தையும் வழங்கி விட்ட ஏடிகேவின் தியாகவுள்ளத்தைப் பாராட்டினார் பிக் பாஸ்.
+ There are no comments
Add yours