உதவி இயக்குனர் – நடிகர் – இயக்குனர்: டி.பி.கஜேந்திரன் கடந்து வந்த பாதை – Assistant Director – Actor

Estimated read time 1 min read

உதவி இயக்குனர் – நடிகர் – இயக்குனர்: டி.பி.கஜேந்திரன் கடந்து வந்த பாதை

05 பிப், 2023 – 12:02 IST

எழுத்தின் அளவு:


Assistant-Director---Actor---Director:-TP-Gajendran-history

குடும்பச்சூழலை பின்னணியாக வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு போன்ற வெற்றி பெற்ற இயக்குநர்களின் பட்டியலில் இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கும் ஒரு தனி இடமுண்டு. இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். மறைந்த பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலக்ஷ்மி இவருடைய வளர்ப்புத் தாய் ஆவார். டி.பி.கஜேந்திரனும் அவரைப் போலவே சினிமா துறையை தேர்ந்தெடுத்தார்.
1981ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த “தில்லு முல்லு”திரைப்படத்தில் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர் கே பாலசந்தரின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த இயக்குநர் விசு, தனியாக படம் இயக்கியபோது இயக்குநர் விசுவிடம் உதவியாளராக தன்னையும் இணைத்துக் கொண்டார் டி பி கஜேந்திரன். விசு இயக்கிய முதல் படமான “கண்மணி பூங்கா”, “மணல் கயிறு”, “டௌரி கல்யாணம்”, “சம்சாரம் அது மின்சாரம்”, “திருமதி ஒரு வெகுமதி” ஆகிய படங்களில் இயக்குநர் விசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார் டி பி கஜேந்திரன்.

1985ம் ஆண்டு இயக்குநர் விசு இயக்கத்தில் வெளிவந்த “சிதம்பர ரகசியம்” என்ற திரைப்படத்தில் ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒரு நடிகராகவும் அறியப்பட்டார் இயக்குநர் டி பி கஜேந்திரன். அதன் பிறகு விசு இயக்கிய “புதிய சகாப்தம்”, “அவள் சுமங்கலிதான்”, “காவலன் அவன் கோவலன்” போன்ற படங்களிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இயக்குநர் டி பி கஜேந்திரன். 1988ம் ஆண்டு தனது குருவான விசுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இவர் இயக்கிய “வீடு மனைவி மக்கள்” என்ற திரைப்படமே ஒரு இயக்குநராக வெள்ளித்திரைக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது.
தொடர்ந்து “எங்க ஊரு காவக்காரன்”, “பாண்டிநாட்டு தங்கம்”, “எங்க ஊரு மாப்பிள்ளை”, “தாயா தாரமா”, “நல்ல காலம் பொறந்தாச்சு” என பல படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்று டி பி கஜேந்திரனை ஒரு நிலையான இயக்குநராக தமிழ் திரையுலகம் அடையாளப்படுத்தியது. “நல்ல காலம் பொறந்தாச்சு”, “பட்ஜெட் பத்மநாபன்”, “மிடில் கிளாஸ் மாதவன்”, “பந்தா பரமசிவம்” என இவரது பெரும்பாலான படங்களின் நாயகனாக நடிகர் பிரபு நடித்திருப்பது இவருக்கும் பிரபுவிற்கும் உள்ள நல்ல நட்பையும், புரிதலையும் உணர்த்துவதாகவே உள்ளது.

நடிகர் விவேக் நாயகனாக நடித்து வெளிவந்த “மகனே என் மருமகனே” என்ற திரைப்படத்தை இயக்கியதோடு தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் இயக்குநர் டி பி கஜேந்திரன். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி ஏறக்குறைய அனைத்து முன்னணி நாயகர்களோடும் இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் டி பி கஜேந்திரன் 15 படங்கள் வரை இயக்கியுள்ளார்.

2010ம் ஆண்டு வெளிவந்த “மகனே என் மருமகனே” என்ற திரைப்படமே இவர் இயக்கிய கடைசி திரைப்படம். தமிழக முதல்வர் ஸ்டாலின் இவரது கல்லூரித் தோழர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours