மெகா தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 5500 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ‘அமுதகானம்’. இந்த நிகழ்ச்சியை ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் ஆதவன். `அமுதகானம்’ ஆதவன் அவர்களை விகடனின் `அப்போ இப்போ’ தொடருக்காகச் சந்தித்தோம்.
“சங்கரன்கோவில் பக்கத்துல இருக்கிற முள்ளிக்குளம்தான் என்னுடைய சொந்த ஊர். தரமணி திரைப்படக் கல்லூரியில் கேமராமேனுக்கான கோர்ஸ் தேர்ந்தெடுத்தேன். அந்தக் கல்லூரியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டிற்கும் பத்து சீட்தான் கொடுப்பாங்க. நான் சேரும் போது கேமராமேனுக்காக மட்டும் 15 பேர் சேர்ந்தாங்க. கேமரா, டைரக்ஷன், எடிட்டிங்னு ஒவ்வொருத்தர் ஒவ்வொரு யூனிட்டுடன் சேர்ந்த பிறகு 5 பேர் மட்டும் தனியா இருந்தாங்க. அதுல நான்கு பேரும் வாத்தியாரையும், மாணவர்களையும் வச்சு கத்துக்கிறதாகச் சொல்லிட்டாங்க.
நான் மட்டும் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு இயக்கம் எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்னு சொன்னேன். சான்றிதழ் பொறுத்தவரைக்கும் கேமராவுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க. எனக்கு மற்ற விஷயங்கள் குறித்துக் கற்றுக் கொள்ளணும்னு நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். பெரும்பாலான நேரங்களில் டைரக்ஷன் ஸ்டூடண்ட், எடிட்டிங் ஸ்டூடண்ட்டுடன்தான் இருப்பேன். அப்படித்தான் அவையெல்லாம் கத்துக்கிட்டேன்.
முள்ளிக்குளம் டிராமா நிறைந்த ஊர். அங்க நாடக மன்றமே 6, 7 இருக்கும். எல்லா நாடக மன்றத்திலும் நான் இருந்திருக்கேன். திருநெல்வேலியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிச்சேன். அங்க படிக்கும்போதே அங்கிருந்த முற்போக்கு நாடகக் குழுவினருடன் இணைந்தேன். அங்க நாடகம் குறித்த நிறைய அனுபவங்கள் கிடைச்சது” என்றவரிடம் `அமுதகானம்’ குறித்துக் கேட்டோம்.
“உலகத்தில் வேறெந்த தொலைக்காட்சிகளிலும் இல்லாத வரலாற்றுச் சாதனையை அமுதகானம் நிகழ்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதி அன்னைக்கு 5500ஆவது எபிசோடு நெருங்கியதைக் கொண்டாடினோம். அன்னைக்கு நாள் முழுக்க 13 மணி நேரம் இந்த நிகழ்ச்சியை மட்டும்தான் ஒளிபரப்பினாங்க.
அமுதகானம் நிகழ்ச்சிப் பிரியர்கள் தாய்க்கும், பிள்ளைக்கும் ஒரே வயசுன்னு சொல்லுவாங்க. மெகா டிவி ஆரம்பிச்சதிலிருந்து அமுதகானம் ஒளிபரப்பாகுது. அதனால மெகா டிவியைத் தாயாகவும், அமுதகானத்தை பிள்ளையாகவும் ஒப்பிட்டுச் சொல்லுவாங்க. அமுதகானம் ஆரம்பத்தில் என்ன டிஆர்பியில் இருந்ததோ அது அப்படியே, இன்னும் சொல்லப் போனால் அதை விட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கு. 60 வயசுக்கு மேற்பட்ட பாடல்கள்தானே போடுறீங்க அப்ப பெரும்பாலும் வயதானவர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்றால் அவர்களும் இருக்கிறார்கள்… 6 வயது குழந்தைங்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறாங்க என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
`கோலங்கள்’ தோழர் கேரக்டருக்கு பல ரசிகர் பட்டாளம் இருந்தாங்க. அதே மாதிரி அமுதகானத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. டி.எம்.செளந்தர்ராஜனை ஒருநாள் சந்திக்க அவருடைய வீட்டுக்கு காலையில் 8.30 மணிக்கிட்ட போயிருந்தேன். அவர் உதவியாளர்கிட்ட, ‘யோவ்… நான் 8-9 யாரையும் சந்திக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?’ன்னு சத்தமா கேட்டது என் காதில் விழுந்தது. சரின்னு அவருக்காக காத்திருந்தேன். 9 மணிக்கு வெளியே வந்து என்னைப் பார்த்ததும், ‘ஆதவன் ஐயா… உங்களைப் பார்க்கிறதுக்காகத்தான் நான் யாரையும் உள்ளே அனுமதிக்கிறதில்லை. 8-9 அமுதகானம் முடிந்த பிறகுதான் வெளியில் போவேன்!’ என்றார். அதுமட்டுமில்லாம அவர் முருகப் பெருமானுடைய தீவிர பக்தர். அவர் வீட்டுப் பூஜை அறைக்கு என்னைக் கூட்டிட்டு போய் முருகன் கையில் இருந்த வேலை எடுத்து என் நாக்கில் எழுதிவிட்டு என்னிடம், ‘எம் முருகப்பெருமான் எனக்கு இதுவரைக்கும் கொடுத்த அத்தனை புண்ணியத்தையும், அருளையும் முழுதாக உனக்குத் தருகிறேன்! நீ நல்லா இருக்கணும்’ன்னு சொல்லி என்னை ஆசிர்வாதம் பண்ணினார். அப்படி நிறைய பாராட்டும், வாழ்த்தும் எனக்குக் கிடைச்சிருக்கு. பலருடைய அன்பில் நெகிழ்ச்சிக் கண்ணீர் வடிச்சிருக்கேன்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ஆதவன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours