ஆதிக்க வெறியால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியனின் நீதிப்போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைச் சொல்பவளே இந்த `பொம்மை நாயகி’!
கடலூரில் டீக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் யோகி பாபு, தன் மகள் பொம்மை நாயகி மற்றும் மனைவி கயல்விழியுடன் தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழும் எளிய மனிதர். மகள் பொம்மை நாயகி நன்கு படிப்பதைப் பார்த்துப் பூரித்துப்போகும் பாசத்தகப்பன். தன் கடையின் முதலாளிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட, அந்தக் கடையை விலைக்கு வாங்கி வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற நினைக்கிறார் யோகி பாபு.
அப்போதுதான் இடியென ஓர் சம்பவம் அவர் வாழ்வில் நிகழ்கிறது. ஊரில் இருக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த இரண்டு நபரால் பொம்மை நாயகி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். தக்க சமயத்தில் யோகி பாபு தன் மகளைக் கயவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டாலும், குற்றவாளிகளை அவரால் தண்டிக்க இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களே ஓடி ஒளியும் சூழலை உருவாக்குகிறது ஆதிக்க சாதியினரின் வெறி. தவற்றைச் செய்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வோ பயமோ இல்லாமல் ஊருக்குள் வளைய வருகிறது ஆதிக்க சாதிவெறிக் கும்பல். அவர்களுக்கு உடந்தையாக நிகழ்ந்த அநீதியை மூடி மறைக்க முயற்சி செய்கிறது போலீஸ். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் தோழர்களின் துணையுடன் சட்டப்போராட்டம் நடத்தும் யோகி பாபுவால் நீதியைப் பெற முடிந்ததா என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.
சமூகத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைத் தைரியமாகப் பேசவந்ததற்காக அறிமுக இயக்குநர் ஷானுக்குப் பாராட்டுகள்! `மண்டேலா’வுக்குப் பிறகு யோகி பாபுவுக்கு பேர் சொல்ல ஒரு படம். முழுக்கதையின் பாரத்தையும் சுமக்கும் ஆழமான பாத்திரம். படம் முழுவதும் சிரிக்காமல் நடித்து அந்த சாமானியன் பாத்திரத்துக்கு ஓரளவு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனால், வெடித்து அழவேண்டிய காட்சியிலும் கூட சலனமே இல்லாமல் அமைதி காத்து நடித்தது ஏனோ? தன் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிறகும் அவரிடம் எந்த உணர்ச்சி பாவங்களும் இல்லாததால் பார்வையாளர்களிடமும் அந்தச் சம்பவம் தாக்கம் செலுத்தத் தவறுகிறது.
9 வயது கதை நாயகி பொம்மை நாயகியாக ஸ்ரீமதி மிகக் கச்சிதமான தேர்வு. ‘பாரத மாதா நான்தான்!’ என்று சொல்லி இயல்பாக நடித்து அனுதாபம் பெறுகிறார். யோகி பாபுவின் மனைவியாக வரும் சுபத்ரா மிக இயல்பாக அந்தப் பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். யோகி பாபுவின் அப்பாவாக ஜி.எம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், கம்யூனிஸ்ட் தோழராக ஹரிகிருஷ்ணன், கூடவே பாட்டுப்பாடி லந்து பண்ணும் காமெடி ரோலில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் எனப் பலரும் பாத்திரமறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சமீபகாலமாகக் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளிவருகின்றன. அதனால் ‘பொம்மை நாயகி’ அதிலிருந்து எந்தவிதத்தில் தனித்துத் தெரியப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு படம் பார்க்கும் முன் நமக்கு எழவே செய்கிறது. ஆனால், முதல்பாதியிலிருந்த அழுத்தம் இரண்டாம் பாதியில் கோர்ட் ரூம் காட்சிகளில் இல்லை. விசாரணையும் வழக்கின் போக்கும்கூட இதற்கு முன் நமக்குப் பழக்கப்பட்ட சினிமா கோர்ட் ரூம் காட்சிகளைப் போலவே இருப்பது அயற்சியைத் தருகிறது.
‘நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர மட்டுமே முடியும்… பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது’ என்ற கள யதார்த்தத்தைக் காட்டியிருப்பது படத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும் அபாயம் கொண்டது. நீதியைப் பெற, பாதிக்கப்பட்டவரும் சட்டத்தை வளைப்பதில் தவறில்லை என்ற கருத்தும் இதனால் மேலோங்குகிறது. இதனால் படம் சட்டத்தை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தையே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
‘அழகி’ படத்துக்குப் பிறகு கடலூர் வட்டாரத்தை அதன் நிலவியல் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறது அதிசயராஜின் கேமரா. செல்வா ஆர்.கேயின் எடிட்டிங் கச்சிதம். சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘நீங்க முதல்வாட்டி ஊர்பேர் கேட்குறப்பவே ஏன் கேட்குறீங்கன்னு நல்லாவே புரிஞ்சிடுச்சி சார்’, ‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன் மட்டும் ஏன் கஷ்டப்படணும்?’, ‘போற உசிரு போராடியே போகட்டும் சார்’ போன்ற வசனங்களில் இருக்கும் யதார்த்தம் படம் முழுவதும் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமாக்களில் ஒன்றாகத் தடம் பதித்திருப்பாள் ‘பொம்மை நாயகி’.
சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துள்ள படம்தான். ஆனால், அதைச் சொன்ன விதத்திலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் அனைவரின் மனதையும் வென்றிருப்பாள் இந்த `பொம்மை நாயகி’!
+ There are no comments
Add yours