ரெட் கார்ப்பெட் வரவேற்புடன் வந்த மணிகண்டன்
கன்ஃபெஷன் அறையில் சிறப்பு தரிசனம் தந்தார் மணிகண்டன். பிக் பாஸ் போல அவர் பேச முயன்றாலும் மைனா உடனே கண்டுபிடித்து விட்டார். அவரின் முகத்தில் அத்தனை சிரிப்பு. அத்தனை உற்சாகம். “ஒரு விஐபி உள்ளே வரப் போறார். அவருக்கு வரவேற்பு சிறப்பா இருக்கணும்” என்று மணி சொல்ல, உண்மையிலேயே ரெட் கார்ப்பெட், ரோஜாப்பூக்கள் இருந்தன. ‘அடப்பாவி மக்கா… நான் பச்சை குத்தினதெல்லாம் வேஸ்ட்டா போச்சே.. நான் வரும் போது மட்டும் இந்த வரவேற்புல்லாம் இல்லையே?” என்று ஜாலியாக கோபப்பட்டார் தனலஷ்மி.
‘வாரேன்.. வாரேன். சீமராஜா’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, கெத்தாக நுழைந்தார் மணி. மங்கைகள் பூக்களைத் தூவி வரவேற்றார்கள். (பழைய இளவரசர் ஆச்சே?!). போர் தளபதி உள்ளே லுங்கி, பனியனுடன் நின்று கொண்டிருந்தார். “எல்லோரும் நல்லா விளையாடறீங்க” என்கிற டெம்ப்ளேட் புகழுரையைச் சொன்ன மணி, பிறகு ‘நான் எந்த எபிசோடையும் பார்க்கலை’ என்று காலை வாரினார். “என்னைப் பத்தி ஏதாவது தப்பாத் தெரியுதா.. சரியா விளையாடலைன்னு சொல்றாங்கடா” என்பது போல் கவலை முகத்துடன் மைனா விசாரிக்க “ப்ரீயா வுடு” என்றார் மணி.
அடுத்ததாக கதிரவன் ‘பிக் பாஸ்’ ஆனார். ஷிவினைப் போலவே இவரும் தனக்கு வந்த வாய்ப்பை பாசிட்டிவ்வாக பயன்படுத்தியது நன்று. “ஒருவரிடம் உள்ள நல்ல குணங்களைப் பற்றி பேச வேண்டும்’ என்று கதிரவன் சொல்ல, ‘அடப்பாவி. விட்டா ஷோவோட நோக்கத்தையே மாத்திடுவான் போலயே’ என்று அசல் பிக் பாஸ் உள்ளே ஜெர்க் ஆகியிருக்கலாம். “அமுதவாணனின் ஹியூமர் பெஸ்ட்” என்று ஷிவின் பாராட்ட, “ஏடிகே ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட். உடனே ஸாரி சொல்லிடுவார்” என்று அமுதவாணன் பாராட்டினார். ‘அதனால அவரை நாமினேட் பண்றேன்’ என்று மைனா அந்தப் பாராட்டை சர்காஸடிக்காக முடித்து வைக்க சபையில் சிரிப்பொலி எழுந்தது.
“பாசிட்டிவ்வான கேரக்ட்டர்” என்று மைனாவைப் பாராட்டினார் ஏடிகே. இந்த டாஸ்க்கில் விக்ரமனும் அசிமும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டதுதான் சிறந்த காட்சி. “முகத்துக்கு நேரா பேசறது அசிம் கிட்ட எனக்கு பிடிச்ச பழக்கம். நான் அவரை நேசிச்ச தருணங்கள் இருக்கு. அவரோட பேச்சுத்திறமை பிடிக்கும். பிக் பாஸையே டயர்ட் ஆக்கிட்டாரு. கான்பிடன்ஸ் லெவல் அதிகம். எளிதில் சோர்ந்து விட மாட்டார்” என்று அசிமின் நல்ல பக்கங்களை விக்ரமன் பகிர்ந்து கொள்ள கையெடுத்து கும்பிட்டார் அசிம்.
+ There are no comments
Add yours