“கோதாவரி… வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி…”
அம்மையப்ப முதலியாராக விசு. கதை, வசனம், இயக்கம் மட்டுமல்ல, அவரின் நடிப்புப் பயணத்திலும் இதுவே பெஸ்ட் எனலாம். ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத் தலைவரின் தியாகத்தை, நியாயமான கோபத்தை, அசட்டுத்தனமான பிடிவாதத்தை, விட்டுக் கொடுத்தலைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தனை சீரியஸான கேரக்ட்டரை காமெடியும் கலந்து நடிக்க விசுவால் மட்டுமே முடியும். மகளைப் பெண் பார்க்க வருகிறவர்களைச் சாக்காக வைத்து “கேசரில நெய் டொக்கு டொக்கு–ன்னு விழணும்” என்று கோதாவரியிடம் வரிசையாக மெனு சொல்வதும், வீட்டின் பணியாளரான மனோரமா, அதை ஜாலியாக நக்கலடித்து காட்டுவதும் அருமையான நகைச்சுவைக் காட்சி.
இதற்கு நேரெதிரான காட்சியும் உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அந்தக் கடுமையான விவாதத்தைத் தமிழ் சினிமாவின் ‘சிறந்த காட்சிகளில்’ ஒன்றாகவும் அட்டகாசமான ‘இன்டர்வெல் பிளாக்’குகளில் ஒன்றாகவும் சொல்லி விடலாம். அனைத்திலும் கணக்குப் பார்க்கும் சுயநலம் மிகுந்த மகன், “என் பணத்தை எடுத்து வைங்க. வெளில போறேன்” என்று சொல்ல, “உன்னை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டேன்… இந்த அம்மையப்ப முதலியாரை உனக்குத் தெரியலையா?” என்று வரிசையாகப் பட்டியலிட்டுக் கேட்பார் விசு. (இப்படி லிஸ்ட் போட்டு வசனம் எழுதுவது விசுவின் ஸ்டைல்). அனைத்துக்கும் ‘தெரியலை’ என்றே மகன் சொல்ல, வீட்டைக் கோடு கிழித்து இரண்டாகப் பிரிக்கும் விசு “என் தலையை அடமானம் வெச்சாவது உங்க பணத்தைச் சீக்கிரம் கொடுத்துடறேன் சார்… இனிமே என் முகத்துல நீங்க விழிக்கக்கூடாது. என் பிணத்துக்குக் கூட கொள்ளி போடக்கூடாது. கெட் லாஸ்ட்” என்று வெடிப்பதும், அந்தச் சமயத்தில் ஒலிக்கும் உக்கிரமான பின்னணி இசையும் எனத் திரையே தீப்பிடிக்கும் ரகளையான காட்சி அது. ஒரு ஃபேமிலி டிராமாவில், ஆக்ஷன் பிளாக்கிற்கு இணையான சூட்டைக் கிளப்ப விசுவால் மட்டுமே முடியும்.
+ There are no comments
Add yours