பொங்கலுக்கு ரிலீஸாகி போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன `துணிவு’, `வாரிசு’ படங்கள். எது வசூலில் நம்பர் ஒன், யார் சூப்பர் ஸ்டார் என்கிற சர்ச்சை ரேஸும் கூடவே ஓடிக்கொண்டிருக்க, `வாரிசு’ படம் இதுவரை உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். பொங்கல் ரிலீஸில் வசூலில் யார்தான் நம்பர் ஒன் என்பதை அறியத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்தைத் தொடர்புகொண்டு பேசினேன்.
“தமிழ்நாடு முழுக்க ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டு படங்களும் சமமான வசூலைத்தான் குவித்து வருகின்றன. எவ்வளவு வசூல் என்பதை அறிய முன்பு போல் தியேட்டருக்குச் சென்று கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அனைத்து நிலவரங்களும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. விஜய், அஜித் இருவருமே முன்னணி நடிகர்கள்தான். அதனால், வசூலில் எவ்வித வித்தியாசமும் இல்லை. ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டால் ‘விஜய் நம்பர் ஒன்’ என்பார். போனி கபூரிடம் கேட்டால் ‘அஜித் நம்பர் ஒன்’ என்பார். வியாபாரத்துக்காக தங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்திப் பேசுவது அவரவர் கடைமை.
ஆனால், ‘நம்பர் ஒன் நடிகர்’, ‘சூப்பர் ஸ்டார்’ என்றால், அவர் ரஜினிதான். கடந்த 40 வருடங்களாக அவர் அப்பட்டத்தைத் தக்கவைத்து வருகிறார். ரஜினி படங்களுக்கு உலகளவிலான வியாபாரம் உள்ளது. விஜய், அஜித் படங்களுக்கும் அப்படியா? இருவரும் கடந்த பத்து வருடங்களாகத்தான் முன்னணியில் இருக்கிறார்கள். தொடர்ந்து 40 வருடங்கள் முன்னணியிலிருந்துவிட்டு சொல்லட்டும். எம்.ஜி.ஆர் என்றால் ஒரு எம்.ஜி.ஆர்தான். இன்னொரு சிவாஜி பிறக்க முடியாது. அதேபோல், ரஜினியும் ஒரு ரஜினிதான். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அது வேறு யாருக்கும் கிடையாது.
அதனால், விஜய், அஜித்துக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டிக்கொள்ளுங்கள். அதில் தவறில்லை. மற்றபடி விஜய், அஜித் இரண்டு பேரும் திறமையான நடிகர்கள்; சமமாக வசூலைக் கொடுப்பவர்கள். ‘வாரிசு’தான் அதிக வசூல் என்று விஜய் ரசிகர்களும், ‘துணிவு’தான் நம்பர் ஒன் என்று அஜித் ரசிகர்களும் சொல்லிக்கொள்ளலாம். இந்த இரண்டுமே உண்மையில்லை. இரண்டுமே சமமான வசூலைக் குவித்துக்கொண்டிருக்கின்றன.
‘துணிவு’ செம்ம க்ளாஸ் படம். புரிகிறவர்களுக்கும் கொஞ்சம் விவரமான ஆடியன்ஸுக்கு மட்டும் பிடித்திருக்கும். சாதாரண ஆடியன்ஸுக்கும் பெண்களுக்கும் ‘வாரிசு’தான் ஓகேவாக உள்ளது. தியேட்டர்களில் ‘துணிவு’ படத்துக்கு ஆன்லைனில் ஹவுஸ்ஃபுல்லாகவும், ‘வாரிசு’ படத்துக்கு கவுன்ட்டர் புக்கிங் இருப்பதுபோலும் காட்டலாம். சாதாரண மக்கள் இன்னமும் நேரில்தான் டிக்கெட் வாங்குகிறார்கள். அதனால்தான், ‘வாரிசு’க்கு அப்படிக் காட்டுகின்றன. அதனால்தான், வசூல் சமமாக வந்துகொண்டிருக்கிறது என்கிறேன்.
அதேநேரம், இரண்டு படத்திலும் கன்டென்ட் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால், செம்ம மாஸாக இருந்திருக்கும். படத்தின் கதையோட்டத்துக்கு ஹீரோ போவதற்குப் பதில், ஹீரோ மேல் கதையைக் கொண்டு செல்கிறார்கள். கதைக்குத் தகுந்தமாதிரி நடிப்பதில்லை. இவர்களுக்குத் தகுந்தமாதிரி கதையை மாற்றிக்கொள்கிறார்கள். கதைக்குத் தகுந்தமாதிரி நடித்தால் இன்னும் மெகா ஹிட்டாகி வசூலைக் குவிக்கும்” என்கிறார்.
+ There are no comments
Add yours