Jailer: `கல கல' காமெடியன்; ராஜமெளலியின் ஹீரோ; ரஜினியின் வில்லன்! – யார் இந்த சுனில்?

Estimated read time 2 min read

தெலுங்கு படங்கள் பார்ப்பவர்களுக்கு நடிகர் சுனில் மிகவும் பரிச்சயமானவர். காமெடி நடிகராக தன் கரியரைத் தொடங்கிய இவர், இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

ஆம் ! இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான நெகட்டிவ் கேரக்டர் சுனிலுக்கு. அதே போல, இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் வில்லனும் இவர்தான். தவிர, ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் நடிக்கிறார். சரி, வாருங்கள்… சூப்பர் ஸ்டாருக்கு எதிராக நிற்கும் இந்த சுனில் யார் என்பதைப் பார்க்கலாம். 

பவன் கல்யாணின் ‘அக்கட அம்மாயி இக்கட அப்பாயி’ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக தன் கரியரைத் தொடங்கியவர் சுனில். ஆனால், அவர் வரும் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. அதன் பிறகு, சில படங்களில் நடித்திருந்தாலும் கவனமிக்க கதாபாத்திரம் கிடைத்தது ‘நுவ்வே காவாலி’ என்ற படத்தில்தான். (‘நிறம்’ என்ற மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் – தமிழில் ‘பிரியாத வரம் வேண்டும்’ என்று ரீமேக்கானது). அதன் பின், காமெடியனாக ஹீரோக்களின் நண்பனாக சுனில் பல படங்களில் நடித்துவிட்டார். சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என அனைத்தும் டோலிவுட் முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இந்த வருடம் தன்னுடைய 200வது படத்தில் நடிக்கவிருக்கிறார். 

சுனில்

நடிக்க வந்த ஐந்து வருடத்திலேயே 100 படங்களில் நடித்துவிட்டார், சுனில். காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்தி டோலிவுட் மக்களின் மனதில் இடம்பிடித்தவருக்கு, ‘சுந்தர புருஷன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்க வாய்ப்பு வருகிறது. ‘அந்தாள ராமுடு’ என்ற அந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. ‘ஹீரோவாகிட்டோம். இனி அப்படியே ட்ராக்கை பிடித்துவிடலாம்’ என்று நினைக்காமல் மீண்டும் தனக்கான காமெடி ட்ராக்கிற்கு வந்து மீண்டும் ஓடத் தொடங்குகிறார். ஏராளமான ஹிட்டுகள் கொட்டுகின்றன.

பின், மீண்டும் வருகிறது ஹீரோ வாய்ப்பு. அதுவும் ராஜமெளலி இயக்கத்தில். இறுக்கப்பற்றிக்கொண்டார், சுனில். படத்தின் பெயர் ‘மரியாதை ராமண்ணா’. ‘மஹதீரா’ ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, காமெடியன் சுனிலை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார் ராஜமெளலி என்ற பேச்சுகள் கிளம்பின. அந்தப் படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இதுதான் பின்னர், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியானது. 

‘மரியாதை ராமண்ணா’ படப்பிடிப்பில் இயக்குநர் ராஜமெளலியுடன் சுனில்

தான் ஹீரோவாக நடித்த படம் ப்ளாக்பஸ்டரானதைத் தொடர்ந்து, ‘நடிச்சா இனி ஹீரோதான்’ என்ற முடிவை எடுத்தார், சுனில். நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. ஹீரோவாக நடிப்பதற்காக தனக்கு வந்த வாய்ப்புகளுக்கெல்லாம் ‘நோ’ சொன்னார். அடுத்தடுத்து ஹீரோவாகவும் நடித்தார். அதில் ஒரு சில படங்கள் தவிர, மற்றவை எதுவும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. அதனை சுதாரித்துக்கொண்டு, மீண்டும் காமெடி என்ட்ரி. நிறைய படங்களில் மீண்டும் சுனிலின் முகத்தை பார்த்தனர், தெலுங்கு மக்கள்.

அடுத்து ஒரு வாய்ப்பு வருகிறது. இந்தமுறை ஹீரோவாக அல்ல வில்லனாக. ‘ஆஹா… இதையும் எப்படி இருக்குனு பார்த்திடலாம்’ என களமிறங்கினார், சுனில். வில்லனாக மிரட்டினார். ‘கலர் போட்டோ’ என்ற படம். 2020ல் வெளியான தெலுங்கு படங்களில் கவனிக்கப்பட்ட முக்கியமான படம். குணசித்திர வேடங்களில் நடித்து வந்த சுஹாஸ் இதில் நாயகன். காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து வந்த சுனில், இதில் வில்லன். இந்தப் படம்தான் 2020ம் ஆண்டில் சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருது வென்றது.

‘கலர் போட்டோ’ படத்தில் சுனில்

‘கலர் போட்டோ’ படத்தில் வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து, ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க வைத்தார், இயக்குநர் சுகுமார். “சுனில் பிரமாதமான நடிகர் காமெடி நடிகர் சுனில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனா என்று மக்கள் நினைத்தால் என்ன செய்வது ?”என்ற கேள்வி படக்குழுவுக்கு இருந்திருக்கிறது.

“இது சுனில்னு தெரியாத அளவுக்கு அவருடைய லுக்கை மாற்றிவிடலாம். தவிர, இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் என்பதை முன்கூட்டியே மக்களுக்கு சோஷியல் மீடியா மூலம் சொல்லி சொல்லி அவர்களின் பார்வையை மாற்றலாம். அப்போது ஏற்றுக்கொள்வார்கள்” என்ற அல்லு அர்ஜுனின் ஐடியாவுக்கு பிறகே, `மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார், சுனில்.

‘புஷ்பா’ படத்தில் சுனில்

‘புஷ்பா’வுக்கு பிறகு, தமிழில் ‘மாவீரன்’, ‘ஜப்பான்’, ‘ஜெயிலர்’ என அடுத்தடுத்து படங்கள் கிடைத்துள்ளன. ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட சினிமாவிலிருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால் மற்றும்  விநாயகன் ஒப்பந்தமாகி இருந்தார்கள். இந்நிலையில் தெலுங்கிலிருந்து சுனிலை கமிட் செய்திருக்கிறார், இயக்குநர் நெல்சன். 

சமுத்திரக்கனி டோலிவுட்டின் செல்லப்பிள்ளையானது போல, சுனில் கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஆக, இனி பல தமிழ் படங்களில் சுனிலைப் பார்க்கலாம். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், வில்லன்களை காமெடி நடிகர்களாக மாற்றி சில சர்ப்ரைஸ்களை கொடுத்தது தமிழ் சினிமா. ஆனால், காமெடி நடிகரை வில்லனாக்கி அழகு பார்த்திருக்கிறது தெலுங்கு சினிமா. 

‘ஜெயிலர்’ படத்தில் சுனில்

சுனிலுக்கு தமிழ் சினிமாவுக்கான பந்தம் இப்போது தொடங்கியதல்ல. சுனில் நடித்த பல கேரக்டர்கள் இங்கேயும், விவேக், வடிவேலு நடித்த பல கேரக்டர்களை சுனில் தெலுங்கிலும் நடித்த லிஸ்ட் ஒன்று இருக்கிறது. 

சுனில் நடித்த தமிழ் ரீமேக் தெலுங்குப் படங்கள்:

 ‘ரன்’ – விவேக் கேரக்டர் – ‘ரன்’

‘தில்’ – விவேக் கேரக்டர் – ‘ஶ்ரீராம்’

‘யூத்’ – விவேக் கேரக்டர் – ‘சிரு நவ்வத்தோ’

‘எனக்கு 20 உனக்கு 18’ விவேக் கேரக்டர் – ‘நீ மனசு நாக்கு தெலுசு’ 

‘சாமி’ விவேக் கேரக்டர் – ‘லக்‌ஷ்மி நரசிம்மா’

‘எங்கள் அண்ணா’ பாண்டியராஜன் கேரக்டர் – ‘குஷி குஷிகா’

‘திருடா திருடி’ கருணாஸ் கேரக்டர் – ‘தொங்கா தொங்கிடி’

‘உன்னை நினைத்து’ ரமேஷ் கண்ணா கேரக்டர் – ‘செப்பவே சிருகாலி’

‘நாடோடிகள்’ கஞ்சா கருப்பு கேரக்டர் – ‘சம்போ சிவ சம்போ’

‘குசேலன்’ வடிவேலு கேரக்டர் – ‘கதாநாயகடு’

‘சுந்தரபுருஷன்’ லிவிங்ஸ்டன் கேரக்டர் – ‘அந்தாள ராமுடு’

‘வேட்டை’ மாதவன் கேரக்டர் – ‘தடகா’

‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினியுடன் சுனில்

சுனில் முதலில் நடித்து பிறகு, தமிழில் ரீமேக் செய்யப்பட்ட கேரக்டர்கள்  

‘தித்திக்குதே’ – விவேக் கேரக்டர் – ‘மணசந்த நுவ்வே’

‘வசீகரா’ வடிவேலு கேரக்டர் – ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’

‘மழை’ வடிவேலு கேரக்டர் – ‘வர்ஷம்’

‘குட்டி’ மயில்சாமி கேரக்டர் – ‘ஆர்யா’

‘உத்தமபுத்திரன்’ கருணாஸ் கேரக்டர் – ‘ரெடி’

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ சந்தானம் கேரக்டர் – ‘மரியாதை ராமண்ணா’

‘யாரடி நீ மோகினி’ கருணாஸ் கேரக்டர் – ‘ஆடவாரி மாடலாகு அர்தலே வெருலே’

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ சத்யன் கேரக்டர் – ‘பொம்மரில்லு’

உனக்கும் எனக்கும் சந்தானம் கேரக்டர் – ‘நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா’

வெல்கம் டு கோலிவுட் சுனில்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours