பிக்‘இந்த சீசனின் வெற்றியாளர் யார்?’ என்பதை அறிந்து கொள்வதைத் தவிர இனி வேறு எந்த சுவாரசியமும் இருக்காது என்று தோன்றுகிறது.
ஒரு சென்டிமென்ட் டாஸ்க்கை வைத்து விட்டு, பொருட்காட்சி போல இந்த சீசனின் நினைவுகளை சங்குசக்கர வெளிச்சத்துடன் காட்டி பாசமழைப் பொழிய ஆரம்பித்துவிட்டார் பிக் பாஸ். ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் வழக்கமான சடங்குகள்தான். புதிதாக எதுவுமில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
மனதில் தங்காத ஒரு பாடலுடன் நாள் 102 விடிந்தது. “15-க்கு மேல போனா பெட்டி எடுக்கறத பத்தி யோசிங்க” என்று அமுதவாணனின் நிதி ஆலோசகராக மாறி உபதேசித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. “அதான் யோசிக்கறேன். வெளில இருந்து வந்தவங்க சொன்னதெல்லாம் மைண்ட்ல ஓடுது. பதினைந்துன்னா யோசிப்பேன்” என்று மனதில் சஞ்சலத்துடன் பேசினார் அமுது.
‘என்னை நானே சிகரத்தில் வைத்தேன், அதனால் உனக்கென்ன?’ என்று ‘அட்டகாசம்’ படத்தின் பாடலைப் பாடி காமிராவைப் பார்த்து கண்ணடித்தார் அசிம். இன்னொரு பக்கத்தில் தேமேவென்று உட்கார்ந்திருந்த விக்ரமனை காமிரா குறும்பாக காட்டியது. எதைச் செய்தால் புரமோவில் வரும் என்கிற டெக்னிக்கை அசிம் நன்கு கற்றிருக்கிறார்.
அசல் அசந்து தூங்கிக் கொண்டிருக்க நாய் குரைத்தது. “நைட்டு தூங்கவே முடியலை பிக் பாஸ். ஒரே குறட்டை சத்தம். அதனாலதான் நாய்களுக்கு வேலை கொடுக்க வேண்டியதாப் போச்சு. மன்னிச்சூ” என்று முகத்தில் காட்டிக் கொள்ளாத குறும்புடன் சொன்னார் அசல். சமயங்களில் இவரின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.
‘நன்றி சொலல உனக்கு.. வார்த்தையில்ல எனக்கு’…
‘ஒகே.. சும்மாதானே இருக்கீங்க. வாங்க பேசிட்டு இருப்போம்’.. என்று சபையைக் கூட்டினார் பிக் பாஸ். “உங்கள் மீது நிபந்தனையில்லாமல் இதுவரை அன்பு செலுத்திய மனிதர்களிடம் ‘Taken for granted’ மோடில் நன்றி சொல்லாமல் இருந்திருப்பீர்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் சமயம் இது’ என்று ஒரு டாஸ்க். உண்மையில் சற்று நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
முதலில் வந்த மைனா தன் தம்பியைப் பற்றிக் கண்கலங்கி சொல்ல ஆரம்பித்தார். “எனக்கு பிரச்சினை வரப்பல்லாம் கூட வந்து நின்னிருக்கான். இப்ப வரைக்கும் அவனுக்கு தாங்க்ஸ் சொன்னதில்லை. இந்த வீட்ல கூட எவ்வளவோ அட்ஜெஸ்ட் பண்ணியிருக்கேன். ஆனா வீட்ல ஒரு முறை கூட பண்ணதில்லை. என்னோட முதல் குழந்தை அவன்தான். இனி அவனை நான் பார்த்துப்பேன். அவனோட கல்யாணத்தை கிராண்டா பண்ற அளவிற்கு காசு சேர்பேன்” என்று சொன்ன மைனா, பின்குறிப்பாக “ஏதாவது ஃபிகரை உஷார் பண்ணி தயாரா இருடா தம்பி” என்று சொன்ன செய்தி குறும்பானது.
தன் அம்மாவைப் பற்றி நெகிழ்ச்சியோடு சொல்ல ஆரம்பித்தார் ஷிவின். “எந்தச் சமயத்துல நான் என்ன முடிவு எடுப்பேன்னு தெரியாம பதட்டத்தோடயே இருப்பாங்க. நான் எடுக்கற முடிவுக்கு பயப்படுவாங்க. அக்காவும் என் மேல அன்பு காட்டியிருக்காங்க.
நான் இவ்வளவு தூரம் பாதுகாப்பா வந்ததுக்கு என் நண்பர்கள்தான் காரணம். அவர்கள்தான் என் குடும்பம். ‘‘Taken for granted’-ஆ எடுத்தது தப்பாக்கூட படலை. இனிமே அவங்களை நான் பார்த்துப்பேன். விட்ற மாட்டேன்” என்று சொல்லி அமர்ந்தார்.
அடுத்த வந்த மகேஸ்வரியின் பதிவும் உருக்கமாக இருந்தது. “என் கதை எல்லோருக்கும் தெரியும். வெளில வேலைக்கு போயிட்ட வர்ற பிரஷரையெல்லாம் வீட்ல அம்மா கிட்ட காண்பிச்சிருக்கேன். அந்தக் கஷ்டமெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்’ன்னு கத்தியிருக்கேன். ஆனா வெளில போறவங்களுக்காவது ஏதாவது டைவர்ஷன் இருக்கு. வீட்ல இருக்கறவங்களுக்கு அது கூட கிடையாது.
‘கொஞ்ச நேரமாவது உக்காந்து பேசணும்ன்றதுதான் அவங்க எதிர்பார்ப்பா இருந்தது’. அது எனக்கு லேட்டாதான் புரிஞ்சது. ஸாரிம்மா. இனிமே பேசறேன். என் பையனும் அப்படித்தான். எதையும் அவன் வாய் திறந்து கேட்டதில்லை. சூழல் காரணமா போர்டிங் ஸ்கூல்ல போட்டிருக்கேன். தாயோட அன்பு அவனுக்கு கிடைக்க வேண்டிய சமயத்துல கிடைக்கலை. படிச்சுட்டு வாடா. எல்லா அன்பையும் உனக்கே தரேன்” என்று கண்கலங்கினார் மகேஸ்வரி.
அடுத்ததாக வந்த அமுதவாணன், தன் அண்ணன் இதயநிதிக்கும் ‘கலக்கப் போவது யாரு’ பாலாவிற்கும் மனமார நன்றி சொன்னார். “நான் கேட்காமய செலவுக்கு காசு கொடுப்பாரு.. எங்க அண்ணன்.. படத்துல வர்ற காட்சி மாதிரியே இருக்கும். கைல இருக்கறதையெல்லாம் அள்ளிக் கொடுத்துடுவாரு. நான் வீடு கட்டும் போது அவர்தான் உதவி செஞ்சார். ஓடு சரிந்து விழுந்து ஆஸ்பிட்டல இருந்தாரு. அப்போ பாலாதான் கூட இருந்து பார்த்துக்கிட்டான். நான் தனியா இருக்கும் போதெல்லாம் எதையாவது பேசி மோட்டிவேட் பண்ணிக்கிட்டே இருப்பான்” என்று முடித்து கைகூப்பி விட்டுச் சென்றர் அமுது. இன்னொரு அண்ணனின் பெயர் முத்தமிழ்ச் செல்வனாம். (சூப்பர்ல!).
‘என் குடும்பம் பத்தி நான் எங்கயும் சொன்னதில்ல’
அடுத்ததாக வந்த விக்ரமனின் ‘நன்றி கூறல்’ வித்தியாசமாக இருந்தது. “அரசியல் நேர்காணல்கள் தொடர்பா எனக்கு நிறைய பிரச்சினைகள் வந்திருக்கு. ஒருமுறை கொலை மிரட்டல் கூட வந்திருக்கு. உள்ளுக்குள் அச்சமாவே இருக்கும். என் குடும்பத்துக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு. அதனாலேயே அவங்க அடையாளத்தை நான் எங்கயுமே பதிவு பண்ண மாட்டேன். ஃப்ரீஸ் டாஸ்க்ல கூட அவங்க வரக்கூடாதுன்னு பயந்தேன்.
வந்தப்ப சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் நெருடலா இருந்தது. வார்த்தையால சொல்லாம வாழ்க்கையா வாழறவங்க அவங்க. என்னுடைய நெடிய பாதையில் நண்பர்கள்தான் துணையா நின்னிருக்காங்க. சைலண்ட்டா இருக்கற தம்பியும். (அசிம் எழுந்து கைத்தட்டுகிறார்!). சமூகவலைத்தளங்களில் கூட என் குடும்பத்தைப் பற்றி ஒரு செய்தி கூட இருக்காது.
என் தங்கச்சி பத்தி நான் எங்கயும் பேசினதே கிடையாது. அவ பொலிட்டிக்கலி ஸ்ட்ராங். ரெண்டு பேரும் நிறைய விவாதிப்போம். இப்ப டெல்லில இருக்கா. ஒருமுறை வீடியோ கால் பண்ண போது பின்னாடி ஒரே சத்தம். என்னன்னு விசாரிச்சா ‘ஒரு போராட்டத்துல இருக்கேண்ணா’ன்னு சொன்னா. தலைநகரம் போராட்டக்களம். அவ பேரு தமிழரசி. பெருமையா இருக்கு” என்று பரவசத்துடன் சொல்லி முடித்த விக்ரமனை அனைவரும் பாராட்டினார்கள்.
அடுத்து வந்து பேசிய அசிமின் உரை சென்டியாக இருந்தது. வித்தியாசமான அசிமைப் பார்க்க முடிந்தது. “என்னோடது மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். குடும்பத்துல நான் யாருக்கும் இதுவரை நன்றி சொன்னதில்லை. என்னை வளர்த்த அப்பா, நான் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகும் ஒருமுறை கூட பணம் பத்தி பேசினதில்ல. முகத்திற்கு நேரா பாராட்டவே மாட்டார். ஆனா பின்னாடி பெருமையா பேசுவார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான். என் தம்பிதான் எனக்கு பலம். ஒருமுறை கூட அவன் என் பேர் சொல்லி கூப்பிட்டதில்லை.
‘அண்ணே.. அண்ணே..’தான்.. சதாம்.. என் நண்பன். எத்தனையோ கஷ்டத்துல கூட நின்னிருக்கான். பையன் ரேயான்.. நாலரை வயசு.. ‘அம்மா.. அப்பா கூட சேர்ந்து படத்துக்கு போகணும்ன்ற மாதிரியான ஆசைலாம் அவனுக்கு நிறைய இருந்திருக்கும். ‘எங்கப்பா அசிம்’ன்னு அவன் சொல்ற மாதிரி இருப்பேன்” என்று கண்கலங்கி முடித்த அசிமிற்கு மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள். (கோபமும் சத்தமும் இல்லாத ‘இந்த’ அசிமைப் பார்க்கறதுக்கு அவ்வளவு நல்லா இருக்கு!).
“அதெல்லாம் என் மேல என்ன விமர்சனம் வந்தாலும் தட்டிட்டு போயிட்டே இருப்பேன்” என்று அடுத்த சீனில் ஆள் மாறி விட்டார் அசிம். “நல்ல பையன்தான். ஆனா கோபம்தான்… தியானம்.. மௌன விரதம்.. இந்த மாதிரி ஏதாவது ஃபாலோ பண்ணேன்டா தம்பி” என்று சாந்தி உபதேசம் செய்ய “வாய்ப்பேயில்ல ராஜா’ என்று சிரித்தார் அசிம். அடுத்து அவர் சொன்ன தகவல்தான் தூக்கி வாரிப் போட்டது. “சின்ன வயசுல எனக்கு பேசவே வராது”. இதைக் கேட்ட மகேஸ்வரி சொன்னது குறும்பு. “அந்த அசிமை ஒருதடவையாவது பார்க்கணும் மாதிரி இருக்கு”.
‘சிறுநீர் வேண்டும் மன்னா..’ – காமெடி ரீவைண்ட்
“சரி.. வாங்க. சிரிப்பொலி வீடியோவைப் பார்க்கலாம்” என்று சபையைக் கூட்டிய பிக் பாஸ், இந்த சீசனில் நடந்த நகைச்சுவைத் தருணங்களை துண்டு துண்டு வீடியோவாக காட்டி பொழுதைப் போக்கினார். “ஷாக் ஆகாதீங்க. இந்த சீசன்ல Fun-ம் கொஞ்சம் இருந்தது” என்பது அவரின் குறும்பான கமெண்ட்.
‘உருட்டுன்னா என்ன தெரியுமா?’ என்று தனலஷ்மி பேசிய வசனத்தில் ஆரம்பித்து ‘இதான் உருட்டு’ என்கிற வரியை கடைசியில் வைத்து இடையில் சாண்ட்விச் மாதிரி காமெடி காட்சிகளை திறமையாக நிரப்பியிருந்தது எடிட்டிங் டீம். ராஜாங்க டாஸ்க்கில் ‘சிறுநீர் வேண்டும்’ என்று ரச்சிதா கேட்பதையும் “அப்படியா?’ என்று ராபர்ட் சீரியசாக நகர்ந்து செல்வதையும் பார்த்த மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மைனா செய்த குறும்புகள் உள்ளிட்டு சில காட்சிகள் வந்தன.
கார்டன் ஏரியாவில் ஏதோவொரு மாற்றம் செய்வதற்காக வீட்டின் திரைகளை மூடி விட்டிருந்தார் பிக் பாஸ். ஆனால் ஆர்வம் தாங்காமல் மைனா மேலே ஏறி எட்டிப் பார்க்க, ஸ்கூல் வாத்தியார் மாதிரி விக்ரமன் அதைச் சுட்டிக் காட்டி ஆட்சேபம் தெரிவிக்க, இருவருக்கும் மெல்லிய உரசல் எழுந்தது. ‘எட்டிப் பார்க்காதீங்கன்னு ரூல்ஸ் இருக்குங்க மைனா..” என்று விக்ரமன் சொல்ல, ‘அப்படித்தான் பார்ப்பேன்” என்று அடம்பிடிக்கும் குழந்தையாக மாறினார் மைனா. ‘ஸ்டேஜ்ல பெட்டி வந்தா யோசிக்காம அடுத்த செகண்டே எடுத்துடுவேன்’ என்று கூழுக்கும் மீசைக்கும் ஆசையாக தடுமாறினார் அமுது.
இறுதிப் போட்டியாளர்களை கௌரவப்படுத்திய பிக் பாஸ்
கார்டன் ஏரியா சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சீசனின் நினைவுகள், புகைப்படங்களாகவும் டாஸ்க் விளையாடிய பொருட்களாலும் நிரம்பியிருந்தன. பல்வேறு தருணங்கள் கொண்ட புகைப்படங்களை பயாஸ்கோப் மாதிரி பார்க்கும்படி செய்திருந்தது சூப்பர் ஐடியா. பிக் பாஸ் டீமிற்கு பாராட்டு. முதலில் அழைக்கப்பட்ட அமுதவாணன், வெளியே வந்து அலங்காரத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்.
அவரைப் பற்றிய பாராட்டுரையோடு பயண வீடியோவையும் காட்டி, சங்கு சக்கர பட்டாசு பின்னால் சுற்ற “என்னாங்க பிக் பாஸ்.. என்னென்னமோ பண்றீங்க?” என்று சந்தோஷத்தில் அமுதுவிற்கு தலை கால் புரியவில்லை. இதே ராஜமரியாதை அடுத்து வந்த மைனாவிற்கு தரப்பட்டது. மைனா ஹேப்பி அண்ணாச்சி.
வெளியுலக வாழ்க்கையை அறியாமல், அடைக்கப்பட்ட சூழலுக்குள், ஒரே மாதிரியான தினத்தை தினம் தினம் வாழ்வது உண்மையிலேயே ஒரு பெரிய சவால். அந்த ரத்தபூமியில் வாழ்ந்து பார்த்தால்தான் அதன் சூடு தெரியும். வெளியில் இருந்து ஆயிரம் பேசி விடலாம். இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு. வெற்றிக் கோப்பையை ஏந்தப் போகிறவருக்கும் ஸ்பெஷல் பாராட்டு.
இந்த சீசனில் தகுதியுள்ள டைட்டில் வின்னர் யாராக இருக்கும்? உங்கள் சாய்ஸை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
+ There are no comments
Add yours