தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இப்படம் ஜூன் 2-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஷாருக்கானைச் சந்தித்தது குறித்தும், அவருடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்தும் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

அவர் இதுகுறித்து பேசும்போது, “ஆஸ்திரேலியாவில் நடந்த மெல்போர்ன் திரைப்பட விழாவில்தான் முதன் முதலில் ஷாருக்கானைச் சந்தித்தேன். நான் இதற்கு முன் அவரை சந்தித்ததில்லை. முதல் சந்திப்பிலேயே அவர் என்னைப் பாராட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘விக்ரம் வேதா’ படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக என்னிடம் கூறினார். இந்தச் சந்திப்பிற்குப் பின் நான் மீண்டும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில்தான் ஷாருக்கானைச் சந்தித்தேன். அப்போது நான் ‘உங்களுக்கு வில்லனாக இருக்க விரும்புகிறேன்’ என்று விளையாட்டுக்குக் கூறினேன்.
அதற்கு அவர், ‘விரைவில் உங்களை நாங்கள் நடிக்க வைப்போம்’ என்றார். அதன் பிறகுதான் ‘ஜவான்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்று ஷாருக்கானைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றி நினைவுகூர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் பணிபுரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவர் மிகவும் இனிமையானவர். அவருடன் இணைந்து பணியாற்றிய முதல் நாள் ஷூட்டிங்கில் நான் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தேன். ஆனால் அவர் என்னை இயல்பாக (comfortable) உணர வைத்தார்.
பல்வேறு விஷயங்களை அவருடன் நான் விவாதித்தேன். ஜெண்டில்மேனான அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. சில சமயங்களில், ‘நான் உங்களுக்குத் தொல்லை கொடுக்கிறேன்’ என்று கூறி மன்னிப்பு கேட்பேன். ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ‘நீங்கள் கேளுங்கள்’ எனக் கூறி, என் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகப் பதில் அளிப்பார் ” என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
+ There are no comments
Add yours