பா.ஜ.க செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 16, 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. ஜே.பி நட்டா, அமித் ஷா, பா.ஜ.க ஆளும் பிற மாநிலத்தின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நரேந்திர மோடி, “மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாள்கள்தான் இருக்கின்றன. ஆதலால், சமூகத்தின் அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்பட சர்ச்சையை மேற்கோள்காட்டி திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்றக் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்குமாறு பா.ஜ.க-வினுடைய முக்கியத் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ‘ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹப்பத்’ (Almost Pyaar with DJ Mohabbat) படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அந்தப் படத்தின் இயக்குநரும் பாலிவுட் பிரபலமுமான அனுராக் காஷ்யப், பிரதமர் மோடி பேசியது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மோடி இதைக் கூறியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இப்போது அவரது கருத்தால் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டது. யாரும் யாருடைய பேச்சையும் கேட்கமாட்டார்கள். நீங்கள் அமைதியாக இருந்து முன்முடிவுகளையும், வெறுப்பையும் ஊக்கப்படுத்தியதால் விளைந்த கூட்டம் ஒன்று தற்போது சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours