21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சோகம், கண்ணீர், ஆரவாரம், சண்டை சச்சரவுகள், நட்பு, கடும் போட்டிகள், அன்பு, பிரிவு என 106 நாட்களைக் கடந்தது. இதன் உச்சக் கட்டமாக இன்று பிரமாண்ட முறையில் இந்நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது.
இசையுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மேடைக்கு வந்து அமர்ந்தனர். மேள தாள கலைஞர்களின் நடனத்துடன் பிரமாண்ட கொண்டாடத்துடன் கமல் மேடையில் தோன்றி எனர்ஜியுடன் பிரமாண்டத்தை இன்னும் கூட்டினார். பின்னர், ‘இங்கு எல்லோரும் வெற்றியாளர்கள்தான்’ என தனது பேச்சைத் தொடங்கி பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிரவன், அமுதவாணன் மற்றும் மிட் எவிக்ஷன் முறையில் வெளியேறிய மைனா என மூவரையும் அழைத்து அவர்களுக்கானப் பயண காணொலியுடன் மூவரிடமும் பிக்பாஸ் அனுபவம் உள்ளேயும் வெளியேயும் எப்படி இருந்தது என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் கமல்.

அதேபோல, பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பார்வையாளர்களிடமும் இந்த சீசனின் பிக்பாஸ் அனுபவம் பற்றி கேட்டறிந்து கொண்டார். அதன்பின் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் காணொலியில் அறிவுரை கூறியபடியே முன்பே செய்த காணொலியை போட்டுவிட்டு நேரில் வீட்டினுள் சென்று ‘என்னைப் பொறுத்தவரை எல்லோரும் வெற்றியாளர்கள்தான்.
எனவே இந்த பிக்பாஸ் ட்ராஃபியை ஷிவின், விக்ரமன், அசிம் மூவரும் பார்த்து அதனுடன் பேசி அதனை அனுபவித்துக் கொள்ளுங்கள். வெற்றியாளர் யார் என்பதை பிறகு சொல்கிறேன்’ என வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

பின்னர், தனலஷ்மி மற்றும் ஜிபி முத்துவின் நடனம், ஏடிகே -வின் ராப் பாடல் ஃபர்பாமன்ஸ் என போட்டியளர்களின் திறமைகளை மக்கள் வெளிச்சத்தில் அரங்கேற்றினர். இதையடுத்து அசிம் vs விக்ரமன் என போட்டி நிலவ பரபரப்புடன் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளரை எதிர்பார்த்தபடி அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆறாவது பிக் பாஸ் தமிழ் சீசனின் வெற்றியாளாராக அசிம் அறிவிக்கப்பட்டார். வின்னருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை காரும் பரிசாக வழங்கப்படுகிறது.
+ There are no comments
Add yours