நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பலத்த சர்ச்சை, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. படத்தின் முதல் நாளில் மட்டும் 57 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இதில் 2 கோடி ரூபாய் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் மூன்று நாள்களில் 163 கோடியைப் படம் வசூலித்துள்ளது. ‘பாகுபலி 2’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களின் வசூல் சாதனைகளையும் பதான் முறியடித்து இருக்கிறது. உலக அளவில் ‘பதான்’ படம் 313 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட்டில் இதுவரை எந்த ஒரு படமும் வெளியாகி முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூலித்ததில்லை. அந்த வகையில் ‘பதான்’ புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தியா முழுக்க ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததால் படம் மேலும் 300 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆதித்ய சோப்ராவின் தயாரிப்பான இப்படத்தில் நடிகர் சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ‘பதான்’ படத்தின் பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த பிகினி ஆடையின் நிறம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது. அப்பாடலைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் எதிர்ப்புகளை மீறி படம் வெளியானபோது படத்தில் இடம்பெற்ற அப்பாடல் கட் செய்யப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் அடுத்து ‘ஜவான்’ படத்தில், அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
+ There are no comments
Add yours