ஹைதராபாத்: பழம்பெரும் நடிகை ஜமுனா (86) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
கடந்த 1936-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி, கர்நாடக மாநிலம், ஹம்பியில், நிவாசராவ்-கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக பிறந்தார் ஜமுனா. அதன் பின்னர் இவர்களின் குடும்பம் ஆந்திராவின் குண்டூருக்கு குடிபெயர்ந்தது. நடிகை சாவித்ரி நாடகங்களில் நடிக்கும் போது, குண்டூருக்கு வந்தால், ஜமுனாவின் வீட்டில் தங்குவது வழக்கம். அவரது அழைப்பின் பேரில் இவர் சினிமா துறையில் தனது 16 வயதில் கால் பதித்தார். 1952-ல் ‘புட்டிள்ளு’ (பிறந்த வீடு) எனும் தெலுங்கு படத்தில் நடித்தார் ஜமுனா. அதன் பின்னர் 1954-ம் ஆண்டில், ‘பணம் படுத்தும் பாடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார்.
நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக கலைஞராக உலா வந்தவர் ஜமுனா (86). தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அப்போதே ‘பான்’ இந்திய நடிகையாக தென்னிந்தியாவில் பெயர் பெற்றவர் ஜமுனா. தமிழில் இவர், மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தூங்காதே தம்பி தூங்காதே என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்வி. ரங்காராவ், என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ் என மூத்த கலைஞர்களுடன் நடித்து பெயர் பெற்றவர். நடிகை ஜமுனா, 1989-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்து வாஜ்பாய்க்காக பிரச்சாரம் செய்தார்.
நடிகை ஜமுனா இதுவரை 198 படங்களில் நடித்துள்ளார். இவர் மிலான் என்ற இந்தி படத்தில் (1967) சிறப்பாக நடித்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இப்படமே பின்னர் மிஸ்ஸியம்மாவாக தெலுங்கு, தமிழ், கன்னடத்தில் ரீமேக் ஆனது. நடிகை ஜமுனா, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் ரமணா ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு வம்சி என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். ரமணா ராவ் 2014-ல் மாரடைப்பால் காலமானார். அதன்பின் மகனுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த ஜமுனா, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு
தெலுங்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.நடிகை ஜமுனா
+ There are no comments
Add yours