Bigg Boss: அடுத்த சீசனிலாவது இதையெல்லாம் கவனிப்பீங்களா? பிக் பாஸ்க்கு நச்சுன்னு நாலு கோரிக்கைகள்!

Estimated read time 1 min read

பிக் பாஸ் சீசன் 6 ஒருவழியாக முடிவடைந்துவிட்டது. `அசீம் எப்படி ஜெயிக்கலாம்’ என விக்ரமனின் ஆதரவாளர்கள் இந்த நிமிடம் வரை ரிசல்ட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு கேட்டதன் விளைவே இந்த சீரியஸ் ரியாக்‌ஷனுக்குக் காரணம்.

சரி, டைட்டில் வென்ற அசீமுக்கும் கடைசி நாள் வரை அந்த வீட்டுக்குள் இருந்த மற்றவர்களுக்கும் வாழ்த்துகள். ஆனால், நிகழ்ச்சி தொடர்பாக பிக் பாஸிடம் சொல்ல சில கோரிக்கைகள் இருக்கின்றன.

பிக் பாஸ்

ஏனெனில், சுமார் முப்பது மில்லியன் மக்கள் பார்க்கிற இது போன்ற நிகழ்ச்சியில், ‘இவற்றைத் தவிர்க்கலாமே’ எனச் சில விஷயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியது நம் கடமை.

* கன்டென்ட் என்பது நிகழ்ச்சிக்கு ரொம்பவே முக்கியம்தான். ஆனால் அந்த கன்டென்ட் யதார்த்த சூழலுடன் கொஞ்சம் பொருந்திப்போவதாக இருக்கும்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இயக்குநர் குழுவில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும். ஓர் உதாரணம் என்றால், இந்த சீசனில் கலந்துகொண்ட ரச்சிதா, ராபர்ட் மாஸ்டர் இருவரை வைத்துச் சொல்லலாம். ரச்சிதா திருமணமாகி கணவருடன் சிறு கருத்து வேறுபாடு காரணமாக தற்காலிகமாகப் பிரிந்து வாழ்ந்துவருகிறவர். அவரை ராபர்ட் மாஸ்டருடன் இணைத்துக் காட்டப்பட்ட காட்சிகள் தரமானவை அல்ல. அதுவும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பாலாவும் இவர்கள் இருவரையும் சேர்த்து அடித்த கமென்ட்டெல்லாம் ரச்சிதாவுக்கு மட்டும் முகச்சுளிப்பை உண்டாக்கவில்லை, நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கும் அதே மனநிலைதான் இருந்திருக்கக் கூடும்.

ராபர்ட், ரச்சிதா

கமல் சொல்வதுபோல, சம்பந்தப்பட்டவரும் சேர்ந்து சிரிப்பதுதான் நகைச்சுவை. அதில் அவருக்கு வருத்தமென்றால், அது தவிர்க்கப்பட வேண்டிய நகைச்சுவைதான். இது இப்படியான கன்டென்ட்டுகளுக்கும் பொருந்தும்.

* நிகழ்ச்சிக்குள் லவ் ஜோடி இருந்தால் அது நிகழ்ச்சியின் ரேட்டிங்கிற்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் அந்தக் காதல் ரசிக்கக் கூடிய காதலாக இருந்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்டு அங்கு காதல் வயப்பட்ட ஒரு ஜோடி வெளியில் வந்ததும் நிஜ வாழ்வில் இணைந்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளும் காதலா எனத் தெரியாதபடி நிகழும் அந்தரங்க விஷயங்களை எல்லாம் ஒளிபரப்புவதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸு. குடும்பத்துடன் பார்க்க முடியாத சினிமாக் காட்சிகளுக்கு நிகராக வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் டி.வி-யிலும் காட்சிகள் வருமென்றால், அந்த நேரங்களிலெல்லாம் ரிமோட்டைத் தேட வேண்டி வருகிறது. மீறி அப்படித்தான் ஒளிபரப்புவோம் என்றால், கோளாறு உங்ககிட்டதான்… அசல் மாதிரியான ஆட்களைச் சொல்லித் தப்பில்லை.

நிவா, அசல்

* முதல் பரிசாக ஐம்பது லட்சம் தருகிறீர்கள். சரி, இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு? நூறு நாள்கள் வரை அந்த வீட்டிலிருந்து, இறுதி மேடை வரை வந்து, கடைசி நிமிடத்தில் வெற்றியைத் தவற விடுபவர்களுக்கும் ஒரு பரிசுத் தொகையைத் தரலாம். சம்பளத்துடன் கூடுதலாகக் கொஞ்சம் தொகையோ அல்லது ஒரு பரிசுப் பொருளோ நிச்சயம் தரலாம்.

* பொதுவாக போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் சினிமா, டி.வி, மாடலிங் என மீடியாத் துறையிலிருந்தே வருகிறார்கள். மற்ற எல்லாத் துறைகளிலிருந்தும், உதாரணத்துக்கு ஒரு பரபரப்பான பிசினஸ் மேன், ஒரு எழுத்தாளர், ஒரு குடும்பத் தலைவி, பணிபுரியும் பெண், சாதாரண மக்களிலிருந்து ஒருவர் எனச் சமூகத்தின் சகல மூலைகளிலிருந்தும் போட்டியாளர்கள் இருந்தால் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டலாம்.

என்ன பிக் பாஸ், செய்வீர்களா?

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours