கற்றதும் பெற்றதும்தான் முக்கியம் – வம்புகள் முக்கியமல்ல!
இனி பேசுவது ‘உங்கள் நான்’. எப்போதுமே சொல்வதுதான். இந்த ஆட்டம் தரும் பரபரப்பு, மகிழ்ச்சி, கோபம், எரிச்சல் எல்லாமே தற்காலிகம்தான். இந்தப் பெயர்கள் சிறிது நாளில் நமக்கு மறந்து விடும். சம்பவங்கள் மனதிலிருந்து மறைந்து விடும். எனவே இந்த ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம், பெற்றுக் கொண்டோம் என்பதுதான் அதிமுக்கியம்.
போட்டியாளர்களிடம் இருந்த மேன்மையான குணங்கள் நம்மிடமும் இருந்தால் அதை இன்னமும் வளர்த்துக் கொள்ளலாம். அதைப் போலவே கீழமையான குணாதிசயங்கள் வெளிப்பட்டிருந்தால், அதைப் பற்றி விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்மிடம் இருக்கும் கீழ்மைகளைத் திருத்திக் கொள்ளலாம். இந்த சுயபரிசீலனைதான், இந்த ஷோவின் மூலம் நமக்கு கிடைக்கப் போகும், நம்முடனே தொடரப் போகும் நிலையான விஷயம். அதை மட்டும் பிரதானமாகக் கவனத்தில் கொள்வோம். இது சார்ந்த வம்புகள், கிண்டல்கள், புறணிகள் எல்லாம் சில நாள்களில் மறைந்து போகும். பிக் பாஸ் என்பது அடிப்படையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான். ஆனால் இந்தக் கற்றலும் அது தொடர்பான மாற்றமும் நமக்குள் நிகழ்ந்திருந்தால், நம்முடைய நேரத்தைப் பயனுள்ளதாக செலவழித்திருக்கிறோம் என்று நம்மை நாமே தோளில் தட்டிக் கொள்ளலாம்.
+ There are no comments
Add yours