மறுபுறத்தில் வரும் கதை, முழுக்கவே கௌரி ஜி.கிஷனின் தோள்களில் பயணிக்கிறது. கடத்தலில் மாட்டிக்கொண்டு பதறுவது, எதுவும் செய்ய முடியாத ஆற்றாமையில் கத்தி அழுவது, மனவளர்ச்சி குன்றிய இளைஞருக்கு தன் நிலைமையை போன் காலிலேயே விளக்க முயல்வது என முதல் பாதி. கௌரி ஜி.கிஷனின் நடிப்புக்கு நல்ல தீனி. ஆனால், இரண்டாம் பாதியில் கௌரி கிஷன் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள்.
சச்சின், தொடக்கத்தில் தன் மிரட்டல் பார்வையிலும் வஞ்சகம் கலந்த சிரிப்பிலும் வில்லத்தனத்தைக் காட்டி மிரளவைக்கிறார். ஆனால், திரைக்கதை நகர நகர, அழுத்தமாகத் தொடங்கிய வில்லன் கூட்டத்தின் வில்லத்தனங்கள், கோமாளித்தனமாக மாறி, இறுதியில் சப்பென்று முடிகிறது. இந்த மாற்றம், ‘இவங்களுக்கா நாம முதலில் பயந்தோம்?’ என்று எண்ண வைக்கிறது. ஓரிரு காட்சிகளே வரும் வினோத்தின் அம்மாவான ரோகிணியும் வில்லன் சச்சினின் நண்பராக வரும் மகேந்திரனும் தங்களின் நடிப்பால் தனித்து நிற்கிறார்கள்.
மன வளர்ச்சி குன்றிய இளைஞரை ஒற்றை ஆளாக (சிங்கிள் மதராக) பராமரிக்கும் தாயாக ரோகிணியின் வைராக்கியமும், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்னைகளும் தொந்தரவுகளும் அழுத்தமாகக் காட்டப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. தான் மாட்டிக்கொண்ட விஷயத்தை, வினோத்திடம் கௌரி போன் காலில் புரிய வைக்கும் இடம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், மனநலம் குன்றிய ஒரு இளைஞரின் இயலாமையை நகைச்சுவைக்குரிய பொருளாக்கியது அபத்தம்.
+ There are no comments
Add yours