துணிவு படத்தை முன்னிட்டு எச்.வினோத் கொடுத்து வரும் நேர்காணல்களின் பகுதிகள் பல இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், ’துணிவு’ குறித்து அப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் பல்வேறு சேனல்களிலும் நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சேனல் ஒன்றில் பேசிய அவர், “பொதுவாக என் சிந்தனையில் சினிமாவை எப்படி வைத்திருக்கிறேன் என்றால், என்னை நம்பி பணத்தை முதலீடு செய்கிற தயாரிப்பாளருக்கும் அதேபோல், பணத்தைக் கொடுத்து டிக்கெட் வாங்குகிற ரசிகர்களுக்கும் என் படம் ஓர் உத்வேகத்தைத் தரவேண்டும்.
அது என்னவென்றால், மக்கள் சம்பந்தப்பட்ட பொதுவான விஷயங்களில் எது உண்மை, எது பொய் என்று அவர்கள் யோசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதைச் சொல்வதற்கான நேரம் நமக்கு நிறைய இருக்கிறது. அனுபவமும் இருக்கிறது. ஆக, அதை அவர்களிடம் சொல்லலாம். கதைகள் வழியாக சொல்லலாம். நான் எடுத்த எல்லாப் படங்களிலும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்ல முயல்கிறேன்” என்றார்.
மற்றொரு நேர்காணலில் அவர், “நான் நிறைய முறை மாலை போட்டிருக்கிறேன். அதேநேரத்தில் கடவுள் இருக்கிறது, இல்லை என்ற விவாதத்துக்குள் நான் செல்ல மாட்டேன். ஆனால், எனக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் இல்லாமல் வாழ்வதற்கும் பெரிய தைரியமும் தெளிவும் தேவைப்படுகிறது. அதற்கான முழு தைரியமும் தெளிவும் இன்னும் எனக்கு வரவில்லை. ஆகவே, என்னுடைய பிரச்சினைகளிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் தீர்வு பெறுவதற்கு கடவுள் உறுதுணையாக இருக்கிறார்.
ஆக, நான் கடவுளைக் கும்பிடுவதால் மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் கடவுளை வைத்து வியாபாரம் செய்யவோ, அதிகாரத்தை அடையவோ அல்லது ஒருவரை வெறுக்கவோ, பிரிக்கவோ முயலும்போதுதான் கடவுள் பிரச்சினையாகிறார். என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பவர் கணிதத்தில் வரும் எக்ஸ் (x) போன்றவர். கணிதத்தில் எக்ஸ் போட்டு தீர்வு காண்பது போன்று எனக்கு கடவுள் தீர்வாக இருக்கிறார்” என்றார்.
மற்றொரு நேர்காணலில், “மதம் ஒரு உண்மையை சொல்கிறது. அதேபோல் அறிவியல் ஒரு உண்மையை சொல்கிறது. ஒருநாள் மதத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை தப்பு என்று ஒரு சொன்னால், மதம் அவரை கொன்றுவிடுகிறது. அல்லது ஊரைவிட்டு துரத்திவிடுகிறது. அவரை காலிப்பண்ண முயற்சி செய்கிறது. ஆனா, அறிவியல் அப்படி செய்யாது. அது ஒரு உண்மையை சொல்லும். ஒரு விஞ்ஞானி ஒன்றை கண்டுபிடித்து சொல்லியிருப்பார், மற்றொரு விஞ்ஞானி வந்து இல்லை அது சரியில்லை என்று சொல்வார். அப்போது அறிவியல் என்ன செய்யும் என்றால் அவரை கொண்டாடும். அங்கிருந்து பரிமாணம் பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும். இதுதான் இரண்டிற்கு இடையே உள்ள வித்தியாசம். ஒரு தகவல் வழியாகவோ, அறிவியல் வழியாகவோ ஒரு இனமோ, நாடோ பயணிக்கும் போது அது பரிமாணம் பெற்றும் முன்னேறி செல்லும்” என்று பேசியிருப்பார்.
இப்படி அவர் நேர்காணலில் பேசி வரும் பல விஷயங்களில் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது.
இதற்கு முன்பு எச்.வினோத் இப்படியான நேர்காணல்களை கொடுத்ததில்லை. இந்த முறை அதிக அளவில் கொடுக்கிறது. இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு நேர்காணல் கொடுக்கிறீர்கள் என்ற புதியதலைமுறை பேட்டியில் அவர், “இதற்கு முன்பு வீடியோ பேச எனக்கு தயக்கம் இருந்தது. நான் பேசிய நினைத்ததை சரியாக பேசாமல் போய்விட்டாலோ, அது தவறாக சென்று சேர்ந்துவிட்டாலோ என்ன ஆகும் என்ற எண்ணம் இருந்தது” என்று கூறியிருந்தார்.
புதிய தலைமுறைக்கு எச்.வினோத் அளித்த நேர்காணல் வீடியோ தொகுப்பு இங்கே உள்ளது. இதில் சீமான் தமிழில் இனிஷியல் போட சொன்னது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours