கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கனவுப்படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

11 ஆயிரம் கோடி வசூலைக்கடந்த அவதார் 2!

படம் வெளியாகி வெறும் 19 நாள்களே கடந்துள்ள நிலையில், 1.44 பில்லியன் டாலர்கள் அதாவது 11,923.63 கோடி ரூபாய் வரை வசூலித்து உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ’அவதார் த வே ஆஃப் வாட்டர்’.

’அவதார் 2’ ரிலீசுக்கு முன் இப்படம் குறைந்தது 2 பில்லியன் டாலர்கள் (16,400 கோடி ரூபாய்!) வசூலித்தால் தான், நஷ்டம் ஏற்படாமல் தப்பித்து படத்துக்கான செலவை ஈடுகட்ட முடியும் என ஜேம்ஸ் காமரூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெறும் 19 நாள்களில் எதிர்பார்த்த கலெக்‌ஷனில் 70 விழுக்காட்டுக்கு மேல் வசூலித்துள்ள அவதார் 2, விரைவில் 2 பில்லியன் டாலர்கள் வசூலித்து வரலாற்று சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஸ்பென்ஸ் உடைத்த ஜேம்ஸ் கேமரூன்!

ஒருவேளை ‘அவதார் 2’ படம் வெற்றி பெற்றால் அவதார் 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்களை தான் எடுப்பேன் என முன்னதாக ஜேம்ஸ் காமரூன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஜேம்ஸ் காமரூனின் கனவு கிட்டத்தட்ட மெய்ப்பட்டுள்ள நிலையில், அடுத்த பாகத்துக்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அவதார் மூன்றாம் பாகத்தில் புதுவித நாவி மக்களை காட்ட உள்ளதாகவும், அவதார் கிரகத்துக்கு செல்லும் ஏலியன்களான மனிதர்களை மட்டுமே வில்லன்களாக சித்தரிக்காமல், அவதார் கிரக வாசிகளான நாவி இனக்குழு மக்களையும் காண்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே அவதார் முதல் பாகத்தில் வனத்தில் வாழும் ’ஒமேட்டிகாயா’ மக்கள், இரண்டாம் பாகத்தில் நீர்வாழ் நாவி மக்களான ‘மெட்கயினா’ இன மக்கள் ஆகியோரை சுற்றி கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

புது நாவி மக்கள்

இந்நிலையில் நாவி மக்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்பதை அனைவரும் உணரப்போகிறார்கள் என கேமரூன் தன் சமீபத்திய நேர்காணலில் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

“’அவதார் 3’ நான் ஏற்கெனவே காட்டியவற்றிலிருந்து வேறுபட்ட கலாச்சாரங்களை ஆராயும். ஏற்கெனவே காண்பித்த நாவி மக்களில் இருந்து மாறுபட்ட நெருப்பு உலகைச் சேர்ந்த ‘ஆஷ்’ எனப்படும் இன மக்களை காண்பிக்கப்போகிறோம். நான் நாவியை வேறொரு கோணத்தில் காண்பிக்க விரும்புகிறேன். அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே இதுவரை காண்பித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

+ There are no comments
Add yours