பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி வெளியாகிறது விஜய்யின் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில். வம்சி பைடிபள்ளி இயக்கி இருக்கும் படத்தை தில் ராஜூ தயாரித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார், ஷாம். படம் பற்றி அவரிடம் பேசினோம்.
இந்தப் படத்துல என்ன கேரக்டர் பண்றீங்க?
இதுல விஜய் அண்ணாவோட சகோதரர்கள்ல ஒருத்தனா நடிச்சிருக்கேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். என்னால முடிஞ்சதை சிறப்பா செஞ்சிருக்கேன். நிறைய விஷயங்கள்ல விஜய் அண்ணா என்னை ஊக்கப்படுத்தினார். தமிழ்நாடே கொண்டாடுற ஒரு ஸ்டார், இவ்வளவு சிம்பிளா, மத்தவங்களையும் அரவணைச்சு நடிக்கிறது பெரிய விஷயம். அதனாலதான் அவர் அந்த இடத்துல இருக்கார்.
இது, ‘ஃபேமிலி எமோஷனல்’ கதையை கொண்ட படமா?
டிரெய்லரை பார்த்துட்டு அப்படி கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன். கதையா இது வேற மாதிரி இருக்கும். பொதுவா இயக்குநர் வம்சியோட முந்தைய படங்களைப் பார்த்தீங்கன்னா, மனித உணர்வுகளை அழகா கதையில சொல்லியிருப்பார். அது இந்தப் படத்துலயும் இருக்கும். கதையில சொல்ற மெசேஜ் எல்லாருக்குமானதுதான். அது பிடிக்கும். ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரி நிறைய மாஸ் காட்சிகள் இருக்கு. படத்துல சரத்குமார், ஸ்ரீகாந்த், விஜய் அண்ணா இவங்களோட காம்பினேஷன்ல நான் வருவேன். ராஷ்மிகாவோட எனக்கு காட்சிகள் இல்லை.
படத்துல எல்லாருமே சீனியர்கள். அவங்களோட நடிச்ச அனுபவம்?
சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபுன்னு நிறைய சீனியர் நடிகர்கள்ல நடிச்சிருக்காங்க. அவங்களோட அனுபவங்களை கேட்டா, ஆச்சரியமா இருக்கு. இன்னைக்கு பெரிய உயரங்களைத் தொட்டிருக்கிற எல்லாருக்கு பின்னாலும் நிறைய கஷ்டங்களும் போராட்டங்களும் இருக்குங்கறதை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. விஜய் அண்ணா, புரொபஷனலா வேற லெவல்ல இருக்கார். ‘வாரிசு’ படத்துல 63 நாட்கள் நடிச்சேன். எந்தக் காட்சிக்கும் அவர் ரிகர்சல் பார்க்கலை. ஆனா, முதல் டேக்லயே காட்சி ஓ.கே.ஆகிரும். அவராவே, இன்னொரு டேக் வேணுமா?ன்னு கேட்பார். அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது என்னன்னா, அமைதியா இருக்கிறதைதான்.
உங்களை தமிழ்ல தொடர்ந்து பார்க்க முடியலையே?
நடிச்சுட்டுதான் இருக்கேன். வெங்கட்பிரபு இயக்கத்துல ‘பார்ட்டி’ படத்துல நடிச்சேன். சில காரணங்களால அது ரிலீஸ் ஆகலை. பிறகு கரோனா வந்துருச்சு. அப்ப ஆரம்பிக்கப்பட்ட சில படங்கள் இப்ப போயிட்டு இருக்கு. அதுல நடிச்சுட்டு இருக்கேன். அது பற்றிய அறிவிப்புகள் வரும்.
விஜய் மில்டன் இயக்கும் ‘கோலிசோடா 3’ல நடிக்கிறீங்களாமே?
அவர் இயக்குற வெப் தொடர் அது. முக்கியமான ரோல்ல நடிக்கிறேன். சேரன் சாரும் நடிக்கிறார். பக்காவான ஆக்ஷன் இருக்கு. நடிக்கவும் வாய்ப்புள்ள கேரக்டர். கண்டிப்பா அது பேசப்படற வெப் தொடரா இருக்கும்.
‘6 மெழுகுவர்த்திகள்’ படத்துக்கு இணை தயாரிப்பு பண்ணுனீங்க. அடுத்தும் படம் தயாரிக்கிற எண்ணம் இருக்கா?
அடுத்தும் தயாரிக்கிறேன். எஸ்.ஐ.ஆர் ஸ்டூடியோஸ் என்ற பேனர்ல தயாரிச்சு, நடிக்கிறேன். எஸ்.ஐ.ராஜா என் அப்பா பெயர். அவர் பெயர்லயே கம்பெனி தொடங்கி இருக்கேன். இது சிறப்பான கதை. இதுவரை நான் நடிச்சதுல இருந்து வேற மாதிரியான படமா இருக்கும். இயக்குநர் ஜனநாதன் அசோஷியேட் பரத் இயக்கறார். ஏப்ரல்ல ஷூட்டிங் தொடங்குது.
கன்னட படங்கள்லயும் நடிச்சீங்களே?
ஆமா. அடுத்தும் நடிக்க போறேன். அங்க இருக்கிற ஒரு முன்னணி ஹீரோவோட நடிக்க இருக்கேன். அதுபற்றிய அறிவிப்பும் சீக்கிரமே வரும்.
+ There are no comments
Add yours