ஜனவரி 11-ல் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ என இரண்டு படங்களும் வெளியாவதால், இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் தியேட்டர்களில் ‘துணிவு’ நள்ளிரவு ஒரு மணி காட்சியாகத் திரையிடப்படுகிறது எனவும், ‘வாரிசு’ அதிகாலை 4 மணிகாட்சியாக திரையிடுகிறார்கள் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
‘துணிவு’ படத்துக்கு ‘வாரிசு’ படத்தைவிட அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் இப்போதே தொடங்கப்பட்டு, நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டு வருகின்றன என்றும் பல தகவல்கள் பரவி வருகின்றன.
உண்மையில் இரண்டு படங்களுக்கும் FDFS ஷோ எப்போது? எத்தனை தியேட்டர்களில் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ வெளியாகின்றன என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்டேன்.
“உண்மையைச் சொல்லணும்னா, மதுரையைத் தவிர வேற எந்த ஊர்லேயும் இன்னும் புக்கிங்கைத் தொடங்கல. இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவிக்கிறதுக்கு முன்னாடி, ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டும் ஒருநாள் இடைவெளியில அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்னுதான் சொன்னாங்க. நாங்களும் அப்படித்தான் எதிர்பார்த்தோம். அப்புறம் இரண்டும் ஒரே நாள்ல ரிலீஸ்னு சொல்லிட்டாங்க. அவங்க அறிவிச்சதுக்கு பிறகுத்தான் இந்த விஷயம் எங்களுக்கே தெரியும். இப்ப மதுரையில் மட்டும்தான் புக்கிங் ஓப்பன் ஆகியிருக்கு. மீதமுள்ள தியேட்டர்கள்ல இன்னமும் புக்கிங் ஓப்பன் ஆகலை.
அதேபோல ‘நள்ளிரவு ஒரு மணி காட்சி இருக்குது, அதிகாலை நாலு மணிக்கு FDFS இருக்குது’ன்னு சோஷியல் மீடியாவுலதான் சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. எத்தனை தியேட்டர்கள் ஒதுக்குறதுனு இன்னும் பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. அப்பறம்தான் காட்சிகள் குறித்தெல்லாம் முடிவு செய்யப்படும். புக்கிங் எப்போ தொடங்குதுனு நாளைக்குள்ள அறிவிச்சிடுவாங்க. அநேகமாக இரண்டுக்கும் எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது திங்கட்கிழமை (9-ம் தேதி) தெரிந்துவிடும்” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
+ There are no comments
Add yours