வாரிசு Vs துணிவு… களமாடப்போவது எது? – ஓர் ஒப்பீட்டு முன்னோட்டப் பார்வை | ajith thunivu vijay lead varisu after clashing jilla and veeram

Estimated read time 1 min read

அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி ஒரே நாளில் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. இரண்டு படங்கள் குறித்தும் அஜித், விஜய் குறித்தும் அலசுகிறது இந்தக் கட்டுரை.

இறுதியில் அது அரங்கேறிவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 10-ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. தற்போது 9 ஆண்டுகள் கழித்து இருவரின் படங்களான ‘துணிவு’, ‘வாரிசு’ இரண்டும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதில் 9 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளதே தவிர, இரண்டு தரப்பு ரசிகர்களிடையேயும் அதே உற்சாகமும், ஆர்வமும் இன்றும் குறையாமலிருக்கிறது.

ரவுடியாக இருக்கும் மோகன்லாலை போலீஸாக அவதாரம் எடுக்கும் விஜய் எப்படி திருத்துகிறார் என்பதுதான் ‘ஜில்லா’ படத்தின் கதை. சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் படமாக அது வெளியானது. அதேபோல அஜித்தின் ‘வீரம்’ அடிப்படையில் வில்லனிடமிருந்து ஒரு குடும்பத்தைக் காக்க போராடும் ஒருவரின் கதையாக விரிந்தது. இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், ‘வீரம்’, ‘ஜில்லா’வைக் காட்டிலும் வசூலிலும் விமர்சனங்களிலும் மேலோங்கியே இருந்தது. இரண்டு படங்களுமே சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகி அதன் ஆக்கத்தில் தனித்து நின்றன.

9 ஆண்டுகள் கழித்து உருவாகும் இந்த இருபெரும் நடிகர்களின் படங்களில் விஜய்யின் ‘வாரிசு’ மீண்டும் சென்டிமென்டை கையிலெடுத்துள்ளதை அதன் ட்ரெய்லர் உறுதி செய்கிறது. குடும்பம், தாய்ப் பாசம் என்ற கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டு ஆக்‌ஷனுடன் படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. விஜய்க்கு பலம் அவரது ஃபேமிலி ஆடியன்ஸ். முதல் 3 நாட்கள் ரசிகர்களை நம்பி படம் ஓடினாலும், அதனைத் தொடர்ந்து படத்தைக் காப்பது குடும்ப பார்வையாளர்கள்தான். அதனை கருத்தில் கொண்டே விஜய் கதையை தேர்வு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

இன்னும் நுணுக்கமாக நோக்கினால் 2014-ல் வெளியான அஜித்தின் ‘வீரம்’ படமும், தற்போது வெளியாக உள்ள ‘வாரிசு’ படமும் ‘குடும்பம்’ என்ற ஒற்றைப்புள்ளியில் இணைவதை உணர முடிகிறது. மேலும், நீண்ட காலமாக ஃபேமிலி ஆடியன்ஸை தவறவிட்ட விஜய் ‘வாரிசு’ மூலம் மீண்டும் அந்தப் பார்வையாளர்களை ஈர்க்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறார். ‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு தந்தை, தங்கை, குடும்பம் என்ற எந்த சென்டிமென்டுக்குள்ளும் விஜய் நுழையவில்லை என்பதை குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஆனால், அஜித்தைப் பொறுத்தவரை ‘வீரம்’ படத்திலிருந்தே எடுத்துக்கொண்டாலும், அதன்பிறகு வந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் தந்தை பாசத்தையும், ‘வேதாளம்’ படத்தில் தங்கை பாசத்தையும், ‘விஸ்வாசம்’ படத்தில் அப்பா – மகள் பாசத்தையும், ‘வலிமை’ படத்தில் தாய்ப் பாசத்தையும் தொடர்ந்து சென்டிமென்டை தனது படங்களில் ஒரு பகுதியாக்கி வருகிறார். இடையில் அவரது ‘நேர்கொண்ட பார்வை’ பெண்களை திரையரங்குகளுக்கு கொண்டு வர முயன்றது. இதன் மூலம் அஜித் தனக்கான ரசிகர்களைத் தாண்டி, குடும்ப ஆடியன்ஸ்களை நோக்கி நகர்ந்து வருவதை உறுதி செய்ய முடிகிறது. நிறைய இடங்களில் அவரது இந்த ஃபார்முலா வொர்க் ஆகியிருக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் ‘விஸ்வாசம்’ மோதியபோதும் கூட அவருக்கு இந்த சென்டிமென்ட் ஃபார்முலா பெரிய அளவில் கைகொடுத்தது.

ஆனால், இதற்கு முரணாக தற்போது அந்த ஃபார்முலாவை விஜய் கையிலெடுக்க, ஆக்‌ஷன் கதையை அஜித் தேர்வு செய்திருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. அதேபோல், தமிழில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முழுநீள முதல் திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘துணிவு’ படத்தில் ட்ரெய்லரில் நிறைய விஷயங்களை வெளிப்படுத்தக் கூடாது என்பதில் இயக்குநர் ஹெச்.வினோத் உறுதியாக இருந்தார் என தெரிகிறது.

மேலும், ‘துணிவு’ படத்திற்குள் சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, ‘மாஸ்’ நடிகர்கள் இருவருமே சென்டிமென்டை கையிலெடுத்து களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட இரண்டு படங்களிலும் தங்களுக்கானதை தேர்வு செய்து கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். மறுபுறம் பொது சினிமா பார்வையாளர்கள், மாஸ் நடிகர்களின் இந்த ஆக்‌ஷன் சென்டிமென்டில் இன்னும் எத்தனை நாட்கள் உழன்று கொண்டிருக்கப்போகிறோமோ என்று எண்ணுவதை அறிய முடிகிறது. இதிலிருந்து வெளியேறி அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களை நோக்கி நகர்வதே இருவருக்கும் ஆரோக்கியமானது என்ற கருத்தையும் அவர்கள் பதிவு செய்து வருவது கவனிக்கத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours