“மகா பெரியவாவின் போதனைகள் அடுத்த தலைமுறைக்குப் போய் சேரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்கு, நாடக வடிவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், இதனை நான்கு தலைமுறைகள் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதையாக உருவாக்கியுள்ளேன். சீரியலில் குடும்பத் தலைவர் மகா பெரியவருடன் வருடக்கணக்கில் கூடவே இருந்தவர். அவருக்கு ஒரு பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருக்கும் அந்தக் கொள்ளுப்பேரன் இந்தியா வருகிறான். அதிலிருந்து, கதை ஆரம்பிக்கிறது. அந்தக் கொள்ளுப்பேரனுக்கும் கொள்ளுத்தாத்தாவுக்குமான உரையாடல்கள்தான் கதை.
உதாரணமாக, நமஸ்காரம் ஏன் பண்ணவேண்டும் என்று கேட்கும் கொள்ளுப்பேரனுக்கு, பெரியவர் மூலம் விளக்கம் வரும். அப்படித்தான், பூணூல் ஏன் போடவேண்டும், சந்தியாவந்தனம் ஏன் பண்ணவேண்டும் என்றெல்லாம் மகா பெரியவர் மூலம் காட்டியுள்ளேன். மகா பெரியவர் வாழ்ந்த காலத்தில் மனிதர்களிடம் பாகுபாடு பார்த்ததில்லை. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்றிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பெரியவரைப் பின்பற்றியுள்ளார்கள். இதெல்லாம் சீரியலில் வரும்.
+ There are no comments
Add yours