காந்தியையும், அவர் முன்னெடுத்த அரசியலையும் பற்றி, தான் கலந்துகொள்ளும் மேடைகளில் எல்லாம் பேசிவருகிறார் கமல். அந்த வகையில் அண்மையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு ‘நான் காந்தியின் பேரன்’ என்று உரக்கச் சொல்லிப் பேசியிருந்தார். இதையடுத்து ராகுலும் கமலும் இணைந்து உரையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், இருவரும் நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் ராணுவம், நாட்டின் பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தமிழ் நாட்டின் தனித்தன்மையான அரசியல் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடியிருந்தனர்.
அப்போது ‘ஹே ராம்’ பற்றியும் திரைத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கமல்ஹாசன் பேசியிருந்தார். “என் அப்பா காங்கிரஸ் கட்சியிலிருந்தார். காந்தியை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நான் இளம்வயதில் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இருப்பினும் என் அப்பா என்னோடு ஏதும் வாதம் செய்யமாட்டார், வரலாற்றைப் படி என்று எனக்கு அறிவுரைச் சொல்வார். அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தபோதும் இது குறித்து என்னுடன் வாதம் செய்யமாட்டார். என் 24, 25 வயதுகளில் காந்தியைப் பற்றி நானாக அறிந்துகொண்டேன். பின்னர், இத்தனை வருடப் புரிதலில் அவரது ரசிகனாக மாறிவிட்டேன். இதுதான் நான். இதன் காரணமாகத்தான் ‘ஹே ராம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தேன். அதில் காந்தியைக் கொல்லத் திட்டமிடும் ஒரு கொலையாளிகளில் ஒருவனாக நானும் நடித்திருந்தேன்.
+ There are no comments
Add yours