ராங்கி விமர்சனம்: சர்வதேச பிரச்னைகளும் அரசியல் போதாமைகளும்; த்ரிஷாவின் ஒன் வுமன் ஷோ ஈர்க்கிறதா?

Estimated read time 1 min read

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதையில், எம்.சரவணன் இயக்கத்தில் சர்வதேச பிரச்னைகள், ஃபேஸ்புக் ஆபாச வீடியோ, தீவிரவாதம் எனப் பல தளங்களில் பயணிக்கும் இந்த ‘ராங்கி’ படமாக நம்மை ஈர்க்கிறாளா? பேசப்பட்டிருக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களில் தெளிவு இருக்கிறதா?

ஆன்லைன் மீடியா ஒன்றில் பணியாற்றும் தையல்நாயகிக்கு (த்ரிஷா), தன் அண்ணன் மகள் சம்பந்தப்பட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்கேண்டல் குறித்துத் தெரியவருகிறது. அந்தப் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்க்க அவர் முயல, அது சர்வதேச எல்லைகளைக் கடந்து ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாதியாக இருக்கும் 17 வயது சிறுவன்வரை நீள்கிறது. எல்லைகள் தாண்டி தீவிரவாதத்தை ஒழிக்க (?) த்ரிஷாவும் அவரின் அண்ணன் மகளும் பகடைகளாக்கப்படுகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா, அந்த தீவிரவாதி என்னவானான் என்பதே படத்தின் கதை.

ராங்கி விமர்சனம்

ராங்கி என்னும் போல்டான பூச்சுடன் தையல்நாயகியாக த்ரிஷா. கொஞ்சம் க்ரே ஷேடு கலந்த, அதே சமயம் அரசியல் ரீதியாகப் பண்பட்ட ஓர் ஆழமான பாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஒரு பெண் சம்பந்தப்பட்ட பிரச்னையை அவர் அணுகும் விதம் அழகு. ஸ்டன்ட் காட்சிகள், திமிர் மற்றும் இறுமாப்புடன் திரியும் அந்த உடல்மொழி என ஒரு அசல் ‘ராங்கி’யாக தடம் பதிக்கிறார். த்ரிஷாவின் அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா ராஜனை வைத்தே கதை பின்னப்பட்டிருந்தாலும், அது குறித்து அவருக்கு எதுவுமே தெரியாது என்ற அந்த ஒன்லைன் சுவாரஸ்யம். வழக்கமான போலீஸ் வில்லனாக வரும் இயக்குநர் ஜான் மகேந்திரனின் பாத்திரத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கினால் உருவாகும் சர்ச்சை, எப்படிச் சர்வதேச தீவிரவாதம் அளவுக்குச் செல்கிறது என ஒரு சுவாரஸ்யமான கதைக் கருவைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் இயக்குநர் எம்.சரவணன் அதை முழுநீளக் கதையாக மாற்றும்போது, அதற்கென திரைக்கதை எழுதும்போது அதில் இருக்கும் லாஜிக்கல் மற்றும் அரசியல் பிரச்னைகளையும் சற்றே கணக்கில் கொண்டிருக்கலாம். ஈராக்கின் வரலாற்றைப் புனைவாக வேறொரு நாட்டில் நடப்பதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அனைத்து முக்கியமான பெயர்களையும் சென்சார் செய்துவிட்டப்படியால் இதைத்தான் பேசுகிறார்கள் என நாமே குத்துமதிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ராங்கி விமர்சனம்

ஆரம்பத்தில் வரும் அந்த போலி ஃபேஸ்புக் கணக்கு தொடர்பான சர்ச்சையை த்ரிஷா தலையிட்டுத் தீர்க்கும் விதம் பாராட்டுக்குரியது. தவறு செய்த பெண், பாதிக்கப்பட்ட பெண் என இரண்டு பக்கங்களையும் கணக்கில் கொண்டு யாருக்கும் சிக்கல் ஏற்படாமல் அது சம்பந்தப்பட்ட ஆண்களை அவர் டீல் செய்யும் விதம் முதிர்ச்சி. ஆனால், படத்தின் அரசியல் தெளிவு இந்தக் காட்சியோடு முடிந்துவிட்ட உணர்வையே தருகின்றன அடுத்தடுத்த சிக்கல்கள். தவறு செய்த பெண்ணுக்கு அறிவுரை கூறும் த்ரிஷாவின் கதாபாத்திரம் பின்னர் அதே தவற்றை மறைமுகமாகச் செய்வது என்ன லாஜிக்கோ! அப்படிச் செய்வதோடு அல்லாமல், அது குறித்த ஒரு சின்ன குற்றவுணர்வுகூட இல்லாமல் அடுத்தடுத்த வேலைகள் செய்வது அவரின் கதாபாத்திரத்தின் தன்மையை முற்றிலும் சிதைப்பதாக இருக்கின்றது.

அந்த 17 வயது தீவிரவாதியின் மேல் த்ரிஷாவின் கதாபாத்திரத்துக்கு இருப்பது காதல் என்றால் அதை இன்னமும் முதிர்ச்சியோடும் அரசியல் புரிதலோடும் அணுகியிருக்கலாம். அது தொடர்பாக அவர் மனதில் நினைப்பதாகப் பேசும் வசனங்களில் எந்தவித ஆழமும் இல்லை, நியாயமும் இல்லை. சொந்த நாட்டிலேயே வழியின்றி தவிக்கும் ஒரு போராளிக்குழுவைச் சேர்ந்த ஒருவன், நினைத்த மாத்திரத்தில் சென்னை எழும்பூரில் காவல் அதிகாரியை ஸ்டேஷன் புகுந்து தாக்கும் அளவுக்கு இங்குத் தொடர்புகள் வைத்திருப்பது, நினைத்த மாத்திரத்தில் இந்தியா வந்துவிட்டு ரிட்டர்ன் அடிப்பது போன்றவை லாஜிக்கில்லா மேஜிக்! எண்ணெய் வளம், மத்திய அமைச்சர் என்ற அரசியலில் தீவிரவாதிகளுடன் டீல் பேசுவது எதற்காக என்றொரு குழப்பமும் எழுகிறது.

ராங்கி விமர்சனம்

கே.ஏ.சக்திவேலின் கேமரா பாலைவன நாட்டின் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாகப் படம்பிடித்திருக்கிறது. இரண்டு மணிநேர படத்தை முடிந்தளவு வேகமாக நகர்த்தியிருக்கிறது சுபாரக்கின் படத்தொகுப்பு. சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை; பின்னணி இசையும் சுமார் ரகம்.

எண்ணெய் வளத்தை அபகரிப்பது, அமெரிக்க அரசியலை விமர்சிப்பது எனப் பல விஜயகாந்த் படங்களை நினைவூட்டுகின்றது படம். எடுத்துக்கொண்ட கதை ஓகே என்றாலும் சர்வதேச அரசியல் குறித்த ஓர் ஆழமான பார்வையும், த்ரிஷாவின் கதாபாத்திர முடிவுகளில் தெளிவும் இருந்திருந்தால் இந்த `ராங்கி’ நம்மை ஆச்சர்யப்பட வைத்திருப்பாள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours