Singer Srinivas Exclusive Interview To ABP NAdu Shares Sweet Memories With AR Rahman Young Singers Cinema Opportunities | Exclusive: புதிய தலைமுறைக்கு நல்ல பாடல் கிடைக்குதான்னு தெரியல; ரஹ்மான் பழச விரும்ப மாட்டார்..

Estimated read time 1 min read

ஸ்ரீநிவாஸ் தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். ‘அழகே சுகமா! உன் கோபங்கள் சுகமா’ என்கிற ஒரு பாடல் மட்டுமே போதும் ஸ்ரீ நிவாஸ் குறித்து அறிந்து கொள்வதற்கு!

 

                           

1992ஆம் ஆண்டு ரஹ்மானிடம் அறிமுகம் கிடைத்ததின் பலன், சில விளம்பரப் பாடல்களுக்கு குரல் கொடுத்து வந்தார் ஸ்ரீநிவாஸ்; 1994 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவரின் முதல் பாடலாக மகேஷ் இசையமைப்பில் ‘நம்மவர்’ படத்தில் இடம் பெற்ற “சொர்க்கம் என்பது நமக்கு” என்ற பாடல் அமைந்தது.

news reels

அது வெற்றி பெற்றபோதும், ஒரு பாடகராக அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, 1996ஆம் ஆண்டு ரஹ்மானின் இசையில் மின்சாரக் கனவு படத்தில் இடம் பெற்ற “மானா மதுரை” பாடல்தான்; அதன் பின்னர் பல பாடல்களை பாடி இசை உலகில் உச்ச நட்சத்திரமாக மாறிய ஸ்ரீநிவாஸ் இன்று இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் பாடகர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்; ஒரு அழகிய வேளையில் அவரிடம் உரையாடலை தொடங்கினேன். 

உங்களுக்கு பிடித்த நெருக்கமான பாடல்? 

“நான் பாடின எல்லா பாடல்களுமே எனக்கு நெருக்கமான பாடல்கள்தான்; எனக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைத்ததற்கு எப்போதுமே நன்றி! ” 

மக்கள்கிட்ட அடையாளம் தேடிதந்த பாடல் எது? 

நிறைய பாடல்கள் அடையாளம் கொடுத்துருக்கு;  தனித்துவமா ‘மின்சாரப் பூவே’,  ‘என் உயிரே’, ’ஆப்பிள் பெண்ணே’, ‘பூவுக்கெல்லாம்’ மாதிரியான பாடல்கள் எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. மின்சார பூவே பாடலை ரஜினி சாருக்காக பாடியிருந்தேன்; அந்த பாடலுக்கு நிறைய வரவேற்பு கிடைச்சது; 

ரஹ்மான் சார் கூட ரெக்கார்டிங் ஷெஷனில் நடந்த ஸ்வீட் மெமரீஸ் எதாச்சும் ஞாபகம் இருக்கா ? 
 
ரஹ்மான் சார் கூட எல்லாமே நல்ல மெமரீஸ் தான்; அவர் கூட ஸ்வீட் மெமரீகளை விட அனைத்துமே சேலஞ்சிங்கான மெமரீஸ் தான்; அவருகிட்ட பாடுறது அவ்வளவு சுலபம் இல்ல; நம்மகிட்ட இருந்து புதுசா ஏதாச்சும் எதிர்பார்ப்பாரு; பழச கொடுத்தா அவருக்கும் அது போர் அடிக்கும்; அதனால அவர் கூட சேலஞ்சிங்கான மெமரீஸ் தான் அதிகம்.  

                               

ரஹ்மான் சார்-க்கு அதிக பாடல்கள் பாடியிருக்கீங்க, இந்த காம்போ தானா அமையுதா?

எல்லாமே தானாக அமைந்த வாய்ப்புகள்தான்; ரஹ்மான் சார் மனசு வச்சு தேர்ந்தெடுக்கணும் இவன் தகுதியாவன்னு; அதுக்கு நம்ப எப்பவுமே பிராக்டீஸ் பண்ணிட்டே இருக்கணும், வாய்ப்பு வந்ததும் பயன்படுத்தணும்; 

இந்த காலகட்டத்தில் இண்டிபெண்டன்ட்  மியூசிக் மக்களிடையே நிறைய கவனம் பெற்று வருது, அதனுடைய போக்கு பற்றி உங்களுடைய கருத்து? 

நான் கூட இண்டிபெண்டன்ட்  மியூசிக் 2001-ல பண்ணிருக்கேன்; இப்பக்கூட ஏதாவது பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனால் சினிமா பாட்டு அளவு‌க்கு இன்னும் இண்டிபெண்டன்ட்மியூசிக் நம்ப நாட்டுல வளரல; இப்ப இந்தக் காலகட்டத்தில பெரிய படங்கள்ல மெலடி சாங்ஸ் எதுவுமே வரமாட்டிங்குது; ப்ரோமோஷனுக்காக வேண்டிதான் குத்துப்பாடல்கள் போன்றவை வருது; இந்த மாதிரியான சூழ்நிலையில, மியூசிக் லவ்வர்ஸ்க்கு பிடிச்ச பாடல்கள் இண்டிபெண்டன்ட் மியூசிக்ல வர்றதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. 

மியுசிக் கம்போசிஷன்ல சின்னத்திரைக்கும்,  வெள்ளித்திரைக்கும் ஏதும் வேறுபாடுகள் இருக்கா? 

பாட்டு கம்போஸ் பண்ணும்போது பாட்டு மட்டும் தான் தெரியும்; அந்த எமோஷன்ஸ் தான் முக்கியம் அது எல்லாம் வச்சுதான் பாட்டு கம்போஸ் பண்ணுவோம், வெள்ளித்திரையில அதிக ரீச் கிடைக்கும், சின்னத்திரையும் சாதாரணம்  கிடையாது, இன்னும் அதிகாமாவே ரீச் கிடைக்கும். கிரியேட்டிவிட்டி பொறுத்தவரைக்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது, அப்படிதான் நான் நம்புறேன். 

பாடகி சாதனா சர்கம் மற்றும் சுஜாதா அவர்கள் கூட நிறைய பாடல்கள் பாடியிருக்கீங்க, அந்த காம்போ பற்றி சில மெமரீஸ்? 

அவங்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் சிங்கர்ஸ், பெரிய சிங்கர்ஸ். சுஜாதா எனக்கு இப்போ  நல்ல ஃப்ரண்ட்; நான் நியூ கம்மராக வந்தபோது, அவங்க பெரிய ஸ்டார். அவங்க எப்போதுமே ஒரு கலைஞனுக்கு என்ன மரியாதை கொடுக்கணுமோ அத கொடுப்பாங்க; அது தான் அவங்களோட சிறப்பு. சாதனா சர்கத்திற்கு அப்படி ஒரு வாய்ஸ், Beautiful Rendition அவங்களோடது. அவங்க ரெண்டு பேர்கூடையும் டூயட்ஸ் பாடுனது எனக்கு மிகுந்த சந்தோசம்.

இவர்களுடைய காம்போவில் உங்களுக்கு பிடித்த பாடல்கள்? 

சுஜாதாவோடது   ‘இனி நானும் நான் இல்லை’ பாடல் என்னோட மியூசிக்லே வந்த பாடல் அது  எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.  ‘முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்’ பாடல், அதுல அவங்களோட எமோஷன்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும். சாதனா சர்கம் கூட பாடின ‘அழகே சுகமா’ பாடல்  பிடித்த பாடல் எனக்கு. தேன் மாதிரி பாடியிருப்பாங்க. 

உங்கள் மகள் இந்த  ஒரு பாட்டு அவங்க பாடினா நல்லாயிருந்திருக்கும்னு,நீங்க ஃபீல் பண்ற பாட்டு? 

அவங்க கூட நிறைய ஸ்டேஜ் புரோகிராம் பண்றேன்; அவங்க தான் இப்போ என்கூட பாடுறாங்க. இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்; ஒரு அப்பாவா நான் என் பொண்ணு கூட சேர்ந்து பாடுறதே எனக்கு சந்தோஷமான விஷயமா இருக்கு. 

இப்போ இளம் பாடகர்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்குது. அதே சமயத்துல சீனியர்களுக்கு வாய்ப்பு குறைவாகுதுன்னு ஒரு விமர்சனம் இருக்கு,அத எப்படி பாக்குறீங்க ?

நாங்க நிறைய பாடிட்டோம், சின்ன பசங்க நிறைய பாடணும்; எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு அவங்களுக்கு கிடைக்கலன்ணுதான் வருத்தமா இருக்கு. ஏன்னா அந்த காலகட்டத்தில நல்ல நல்ல பாடல்கள் உருவாக்கினாங்க; அத இன்னும் வரையும் மக்கள் கேட்டுட்டே இருக்காங்க;

அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது ஆனால் நல்ல பாடல் கிடைக்குதான்னு தெரியல; இசையமைப்பாளர்கள் ஒரு பாடகர், பாடகிக்கு அவங்களால என்ன பண்ண முடியுமோ, அதுக்கு தகு‌ந்தமாதிரி  கம்போஸ் பண்ணா நல்லாயிருக்கும்; அப்போதான் நல்ல பாடல்கள் வரும். மக்களுக்கு குத்து பாட்டு தான் பிடிக்கும், அத பண்றோம் அப்படின்னு சொல்லுறது, அது ரொம்ப ஈசியான விஷயம், இதை escapism -னு சொல்லுவேன் நான். 

                     

அப்ப உள்ள பாடலுக்கும், இப்ப வந்துட்டு இருக்க பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு, அதனால இசையோட முக்கியத்துவம் குறைந்த மாதிரி இருக்கு, இதனுடைய போக்க எப்படி பாக்குறீங்க?

இப்ப ஓடிடில படங்கள பாக்கும் போது நாமலே சாங்க்ஸ் பாக்க மாட்டோம், சாங்க்ஸ் ஏண்டா வருதுன்னு நினைப்போம்; ஓடிடி காலம் வந்தாச்சு; அதை தவிர ஒரு சினிமால ஒரு டூயட், ஹீரோ என்ட்ரி பாட்டு, ஹீரோயின் என்ட்ரி பாட்டு, ஒரு ஃபாஸ்ட் சாங்ன்னு ஐந்து பாடல்கள் வரும்;இப்ப சினிமால பாட்டுன்றது ஒரு Speed Breaker மாதிரிதான்; இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாடல்களை பிரோமோஷனுக்கான ஒன்னாதான் பயன்படுத்துறாங்க..” என்று சொல்லி விடைபெற்றார். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours