சேரனை காப்பாற்றுவாறா தமிழ்க்குடிமகன்?
28 டிச, 2022 – 11:05 IST
நல்ல இயக்குராக அறியப்பட்டவர் சேரன். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல நல்ல படங்களை இயக்கினார். சொல்ல மறந்த கதை படத்தில் அவரை நடிகர் ஆக்கினார் தங்கர் பச்சான். அதன் பிறகு சேரன் தான் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் நடித்தார். அது அவருக்கு மைல்கல் படமாக அமைந்தது. அதன்பிறகு அவர் நடித்த தவமாய் தவமிருந்து படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சேரன் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படம் தமிழ்க்குடிமகன். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ்-.ஏ.சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது : இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி மனிதனாக போராடும் ஒருவனை பற்றிய கதை. ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே தான் சாதி உருவானது. இப்போது பலரும் தாங்கள் செய்து வந்த தொழிலில் இருந்து வேறுவேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அதனால் அவர்களை இதற்குமுன் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்த சாதியை வைத்து அழைக்க வேண்டிய தேவை இல்லை.
அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது குறிப்பிடத்தக்க இடைவெளியில் சாதியை முழுமையாக அழித்து விடலாம். சாதி என்கிற வார்த்தை என்னை அழுத்துகிறது, அதனால் சமூகத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை என்று பலரும் குமுறுகிறார்கள். அதற்கு ஒரு விடிவு தரும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. குறிப்பாக உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் படத்தை வெளியிடும் திட்டம் இருக்கிறது. என்கிறார் இசக்கி கார்வண்ணன்.
ஒரு நடிகராக சேரன் மீண்டும் வெற்றி பெற தமிழ்க்குடிமகன் உதவுவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியவரும்.
+ There are no comments
Add yours