மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை குவித்த நிலையில், எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் வெர்ஷனில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா நடித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம், உலக அரங்கில் 500கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அற்புதமான ஒரு படைப்பை அளித்திருந்தனர். அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்த முதல் பாகத்திற்கு பிறகு, இரண்டாவது பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அனைத்துவிதமான ரசிகர்களிடம் அதிகமாகவே எகிறி இருந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ரிலீஸ் தேதி, ஒரு குறு வீடியோவுடன் லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையிடப்படும் என்று லைகா வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ”இருள் நிரம்பும் ஒரு அறையில் ஆதித்த கரிகாலன் அமர்ந்திருப்பது போன்றும், நந்தினி அவருடைய வாளை கையில் ஏந்தியபடியும், பொன்னியின் செல்வர் உயிரோடு மக்கள் மத்தியில் நடமாடும்படியும், வந்தியத்தேவன் உடல் முழுதும் காயங்களுடன் காட்டுக்குள் அமர்ந்திருந்தபடியும்” அந்த வீடியோ முடிவடைகிறது.
பொன்னியின் செல்வன் நாவலின் வாசிப்பாளர்களின் கற்பனையில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கும் காட்சிப்பதிப்பாக ஆதித்த கரிகாலனின் படுகொலை இருக்கும். அந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வி இன்றளவும் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட ஒரு காட்சியின் நீட்சி பதிப்பு அந்த வீடியோவில் அழகாகவே இருக்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஆதித்தனின் மரணம் நந்தினியின் வாளால் மட்டுமில்லாமல் காட்சியமைப்பிலும் “அழகான கொலையாக” மாறவிருக்கிறது என்றே தோன்றுகிறது.
ஆதித்தனின் மர்மமான கொலை நிகழப்போகும் நாள் ஏப்ரல் 28ஆம் தேதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours